கொள்ளையடிக்கச் சென்ற நபர் சிறைச்சாலைக்குள் உயிரிழந்த பரிதாபம்
நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
சந்தேக நபரின் மரணத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மரதகஹமுல ஹபுவலான பகுதியில் வீடொன்றுக்குள் கொள்ளையடிப்பதற்காக சென்றிருந்த சந்தர்ப்பத்தில் தற்போது உயிரிழந்த நபர் உட்பட மேலும் ஒருவரை பிரதேச மக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து குறித்த இருவரையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த இருவரும் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் என்று தெரிவித்தே இவ்வாறு கொள்ளையடிப்பதற்கு முயற்சித்துள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்திருந்தது.
பின்னர் சந்தேக நபர்கள் இருவரும் மினுவங்கொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் ஓகஸ்ட் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவங்கொடை நீதிமன்ற மேலதிக நீதவான் மங்கள வரணகுலதுங்க உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், குறித்த வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேக நபர்களில் ஒருவர் விளக்கமறியலில் இருக்கும் போது உயிரிழந்துவிட்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
பின்னர், இரண்டாவது சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் 2 இலட்சம் ரூபாய் மற்றும் சரீரப் பிணையில் விடுவிப்பதற்கு நீதமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
இந்த வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி மீண்டும் எடுத்துக்கொள்வதற்கு நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
மர்மமான முறையில் உயிரிழந்த சந்தேக நபரின் பிரேத பரிசோதனைகள் இன்றைய தினம் நீர்கொழும்பு மருத்துவமனையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.