வங்கி கணக்கில் பணம் குறைந்த சம்பவம் தொடர்பில் விசாரணை

வங்கி கணக்கில் பணம் குறைந்த சம்பவம் தொடர்பில் விசாரணை

ஷங்ரில்லா விருந்தகத்தில் குண்டை வெடிக்க செய்த இப்ராஹிம் இல்ஹாம் என்பவர் தாக்குதல் இடம்பெற்ற தினத்திற்கு முதல் நாள் இரவு தெமட்டகொடை - மாஹவில வீட்டிற்கு பிரவேசித்து தமது பெற்றோருக்கு வழங்குவதற்காக 2 குரல் பதிவுகளை பதிவு செய்துள்ளதாக ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த ஆணைக்குழுவில் நேற்றைய தினம் சாட்சியம் வழங்கிய குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சேவையாற்றிய உப காவல்துறை பரிசோகதர்கள் துணேஸ் மலித்த அயகம இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இரவு 11.48 அளவில் ஒரு குரல் பதிவையும் அதிகாலை 12.03 அளவில் மற்றுமொரு குரல் பதிவினையும் அவர் மேற்கொண்டாக சாட்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஏப்ரல் 21 ஆம் திகதி தெமட்டகொடை - மாஹவில வீட்டில் குண்டை வெடிக்க செய்த பாத்திமா ஜீப்ரிக்கு சொந்தமான வங்கி கணக்கிற்கு 2014 செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி 5 ஆயிரத்து 435 அமெரிக்க டொலர் பணம் வைப்பாக காணப்பட்டதாகவும் தாக்குதலின் பின்னர் குறித்த கணக்கில் 293.64 அமெரிக்க டொலரே மீதமாக இருந்ததாகவும் சாட்சியாளர் தெரிவித்துள்ளார்.

கணக்கில் இருந்து மீளப்பெறப்பட்ட பணம் தொடர்பில் இதுவரை தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இப்ராஹிம் இல்ஹாம் மனைவியான பாத்திமா ஜீப்ரியின் வங்கி கணக்கில் இருந்த பணம் குறைந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.