தோல்வியடைந்த உறுப்பினரால் கடும் கோபமடைந்த மஹிந்த!

தோல்வியடைந்த உறுப்பினரால் கடும் கோபமடைந்த மஹிந்த!

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர் ஒருவர் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு செல்ல முயற்சித்துள்ளார்.

இந்த வேட்பாளர் தான், போட்டியிட்ட மாவட்டத்தில் உள்ள பௌத்த விகாரைகளை சேர்ந்த பிக்குகளை அழைத்துக்கொண்டு பிரதமர் மகிந்த ராஜபக்சவை சநதித்து, தன்னை தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யுமாறு கோரியுள்ளார்.

குறித்த வேட்பாளரின் இந்த கோரிக்கையால் கடுமையாக கோபமுற்றுள்ள பிரதமர் அவரிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

தோல்வியடைந்த வேட்பாளரை கடுமையாக சாடியுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ச, அவரை அழைத்து வந்த பிக்குமாருக்கு அன்னதானம் வழங்கி அனுப்பி வைத்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் அதனை தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானியிலும் வெளியிட்டுள்ளது. தோல்வியடைந்த வேட்பாளர்கள் எவரும் பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை.

பதுளை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளரே தன்னை தேசிய பட்டியலில் நியமிக்குமாறு கோரியதாக கூறப்படுகிறது.

இந்த வேட்பாளர் பதுளை மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவின் பட்டியலில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்கை வழங்க வேண்டாம் என தனது தேர்தல் பிரசாரங்களின் போது கூறி வந்தார். இந்த வேட்பாளர் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளராகவும் கடமையாற்றி வந்துள்ளார்.