கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: காலியில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் 1,051 இலங்கையர்கள்
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்துள்ள 1,051 இலங்கையர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்களென காலி மாவட்ட தொற்று நோய் வைத்திய நிபுணர், வைத்தியர் வெனுர கே.சிங்க தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாமென்ற சந்தேகத்தின்பேரில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக வெனுர கே.சிங்க மேலும் கூறியுள்ளதாவது, “காலி மாவட்டத்திலுள்ள கொக்கல மற்றும் கொஸ்கொட ஆகிய பிரதேசங்களிலுள்ள ஹோட்டல்களிலேயே 1,051 இலங்கையர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மாலைத்தீவிலிருந்து வருகை தந்த 491 இலங்கையர்களும் இந்தியாவிலிருந்து வருகை தந்த 163 பேரும் டுபாயிலிருந்து வருகை தந்த 142 பேரும் அவுஸ்திரேலியாவிலிருந்து வருகைத் தந்த 255 இலங்கையர்களுமே இவ்வாறு ஹோட்டல்களில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் இவர்கள் இராணுவத்தினரின் மேற்பார்வையின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.