தீவிர சிகிச்சைப் பிரிவிலிருக்கும் பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை எப்படி இருக்கிறது? மருத்துவர்கள் சொல்வது என்ன?
பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு சர்வதேச மருத்துவ நிபுணர்களின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவருடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்(74), கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த, 5-ஆம் திகதி, சென்னை, MGM ஹெல்த் கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன் பின் அவர் உடல்நிலை மோசமடைய உடனடியாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து வெளியாகியுள்ள தகவலில், அவரது உடல்நிலை நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதால், இன்றோ அல்லது நாளையோ வேறு ஒரு பிரத்யேக தீவிர சிகிச்சைக்கு மாற்றப்படுவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவருக்கான சிகிச்சையை கவனிக்க, பொதுமருத்துவம், இருதய நோய், அவசர சிகிச்சை, நுரையீரல், சிறுநீரக துறை, தொற்றுநோயியல் என இன்டர்னல் மெடிசின் நிபுணர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
மருத்துவத்தில் சர்வதேச அளவில் முன்னணியில் இருக்கும், அமெரிக்காவின், மினியாபொலிஸ் பகுதியிலுள்ள, மாயோ கிளினிக் மற்றும் யுனிவர்சிட்டி ஆப் டெக்சாஸ் மெடிக்கல் சென்டரைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள்; மும்பை, டில்லியைச் சேர்ந்த தலா இரு மருத்துவ நிபுணர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவினர், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, எம்.ஜி.எம்., மருத்துவக் குழுவினருடன் தொடர்பில் உள்ளனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் பாலசுப்ரமணியத்தின் உடல் நிலையை, குறிப்பாக இருதயத் துடிப்பு, இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் உபணரங்களின் இயக்கத்தை, இந்த நிபுணர்கள் நேரடியாக பார்வையிட்டு, தகுந்த ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
அதன் படி, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை சிறப்பாக இருப்பதாகவும், அவரது உடல், சிகிச்சையை ஏற்று, முன்னேற்றத்துக்கான முழு ஒத்துழைப்பை அளித்து வருவதாகவும், அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
அவர் இதற்கு முன், தன் உடல் பருமனைக் குறைக்க அறுவைச் சிகிச்சை செய்து கொண்டுள்ளார். தவிர, தைராய்டு மற்றும் லேசான ஆஸ்துமா பாதிப்பும் இவருக்கு உண்டு.
வேறு எந்த வியாதியும் இல்லை.
இது குறித்து பிரபல தமிழ் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு நன்கு உயர்ந்துள்ளது.
அனைத்து வித சிகிச்சைக்கும், உடல் ஒத்துழைக்கிறது. மருந்துகளையும் ஏற்றுக் கொள்கிறது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டே, எட்டு மாதம் தான் ஆகிறது.
குறுகிய காலத்தில், அமெரிக்காவிலுள்ள மாயோ கிளினிக் மற்றும் யுனிவர்சிட்டி ஆப் டெக்சாஸ் மெடிக்கல் சென்டர் ஆகியவை, கொரோனா நோயாளிகளின் பாதிப்புகளை ஆராய்ந்து வைத்துள்ளனர். அந்த நிபுணர்களின் அனுபவம், பாலசுப்ரமணியத்துக்கு சிகிச்சை அளிக்க பெரும் உதவியாக உள்ளது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மேலும், பாலசுப்ரமணியம் சிகிச்சை பெற்று மருத்துவமனையின் டீன் மற்றும் மருத்துவர்களின் அனுபவமும் குறைந்ததல்ல, ஏனெனில் ஏறத்தாழ் ஒரு லட்சம் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த அனுபவம் அவர்களுக்கு இருக்கிறது.
கொரோனா வைரஸ் நுரையீரலை சேதப்படுத்துவதால், உடலில் செல்களுக்கான ஆக்ஸிஜன் சப்ளை பாதிக்கப்படுகிறது.
இதனால் போதுமான ஆக்ஸிஜனை, உபகரணங்கள் வாயிலாக நோயாளிக்கு தொடர்ந்து செலுத்துவதன் மூலம், நுரையீரல் பாதிப்பிலிருந்து விடுவிக்க இயலும்.
கடந்த, இரண்டு நாட்களில், இப்படியான முன்னேற்றத்தை, பாலசுப்ரமணியத்திடம் கண்டிருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.