எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தொடர்பில் சற்று முன்னர் வெளியான தகவல்...!
இந்திய பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் விரைவில் குணமடைவார் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்து எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் புதல்வர் எஸ்.பி.சரண் இதனைத் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலை நேற்று தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் அவர் கடந்த 5 ஆம் திகதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், நேற்று இரவு அவரது உடல் நிலை மோசமானதை அடுத்து, தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார்.
விசேட மருத்துவ நிபுணர்களை கொண்ட குழுவினரின் நேரடி கண்காணிப்பில் உள்ள போதிலும் அவரது உடல் நிலை மோசமான நிலையிலேயே தொடர்ந்தும் உள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்பெறும் அவர், நலமுடன் இருப்பதாக தமது கையால் சைகை காட்டும் ஒளிப்படம் ஒன்றை, அவரை சந்தித்த எழுத்தாளர் ராஜேஸ்குமார் வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில், பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு அவசியமான மருத்துவ உதவிகளை வழங்க தயார் என தமிழக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதேநேரம், எஸ்.பி.பி பூரண உடல்நலம்பெற பிரார்த்தனை செய்வதாக இசை ஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பிரபலங்கள் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.