சீரற்ற வானிலையால் 21,000க்கும் அதிகமானோர் பாதிப்பு - இருவர் பலி

சீரற்ற வானிலையால் 21,000க்கும் அதிகமானோர் பாதிப்பு - இருவர் பலி

நிலவிய சீரற்ற வானிலை காரணமாக இதுவரையில் 5,829 குடும்பங்களைச் சேர்ந்த 21,452 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 23 ஆம் திகதி முதல் இன்று (03) வரையிலான காலப்பகுதியில் இந்த பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக அந்த மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி நாட்டின் 19 மாவட்டங்களிலுள்ள 147 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் காயமடைந்துள்ளதுடன், மேலும் மூவர் காணாமல் போயுள்ளனர்.

அத்துடன், இந்த வானிலை காரணமாக 8 வீடுகள் முழுமையாகவும், 767 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீரற்ற வானிலையால் இரத்தினபுரி மாவட்டமே அதிகளவு பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதுடன், அங்குள்ள 15 பிரதேச செயலகப் பிரிவுகளில் 2,666 குடும்பங்களைச் சேர்ந்த 10,051 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டாவதாக அதிகளவு பாதிப்பு புத்தளம் மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

இதன்படி, புத்தளம் மாவட்டத்தின் 11 பிரதேச செயலகப் பிரிவுகளில் 1,850 குடும்பங்களைச் சேர்ந்த 6,900 பேர் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.