33 அரச நிறுவனங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை!
நாட்டிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 33 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களைக் கலைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அமைய, அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான பிரத்யேகப் பிரிவு ஒன்று கடந்த மார்ச் மாதம் அமைச்சின் கீழ் நிறுவப்பட்டதாக நிதி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, குறித்த பிரிவு தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட 33 அரசு நிறுவனங்களைக் கலைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
வரவு செலவுத் திட்ட யோசனை
2026 வரவு செலவுத் திட்ட யோசனைகளுக்கு அமைவாக, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிறுவனங்களின் ஊழியர் சேமலாப நிதியம் (EPF), ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) மற்றும் பணிக்கொடை (Gratuity) கொடுப்பனவுகள் தொடர்பான நீண்டகால நிலுவைகளைத் தீர்ப்பதற்கு திறைசேரி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நிலுவைகளைத் தீர்ப்பதற்காக ஒதுக்கப்பட்ட 5 பில்லியன் ரூபாயில், 2.8 பில்லியன் ரூபாய் 2026 ஓகஸ்ட் மாத இறுதிக்குள் செலுத்தப்பட்டு முடிவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல்கள் காரணமாக இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் அரசு நிறுவனங்களின் துறை பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்ததாக நிதி அமைச்சு சுட்டிக்காட்டுகிறது.
நிதி அமைச்சு தெரிவிப்பு
மூலப்பொருள் செலவுகள் அதிகரிப்பு, விநியோகச் சங்கிலித் தடங்கல்கள் மற்றும் முன்பதிவு இரத்து செய்யப்படல் உள்ளிட்ட பல பிரச்சினைகள் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த சவால்களுக்கு மத்தியிலும், 51 பிரதான அரச நிறுவனங்கள் 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 259.3 பில்லியன் ரூபாய் மொத்த இலாபத்தைப் பதிவு செய்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அந்த நிறுவனங்கள் 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பதிவு செய்திருந்த மொத்த இலாபம் 227.8 பில்லியன் ரூபாயாகும்.
அதன்படி, கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 51 பிரதான அரச நிறுவனங்களின் மொத்த இலாபம் 31.5 பில்லியன் ரூபாயினால் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.