A9 வீதியில் பேருந்தில் பயணித்த பெண் திடீர் மரணம்
ஹம்பாந்தோட்டையிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த பேருந்தில் இருந்த பெண் ஒருவர், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (29) மாலை உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வவுனியா, இரட்டை இலுப்பைக்குளம், கல்மடு பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த பேருந்து A9 வீதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, பெண்ணுக்கு திடீரெனக் கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இதனையடுத்து, அவரை மதவாச்சி மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னரே அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவரது மரணத்துக்கு மாரடைப்பு காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் மதவாச்சி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.