செம்மணிக்கு என்ன நடக்கப்போகிறது.... நான்கு மாதங்களுக்கு முன்பு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 191 பக்கங்களை கொண்ட இடைக்கால அறிக்கையின் ஒரு பந்தியில், அந்த புதைகுழியில் புதைக்கப்பட்ட உடல்கள் தொற்றுநோயால் இறந்திருக்கலாம் என்றும் இயற்கைப் பேரழிவால் இறந்திருக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக சமூக செயற்பாட்டாளர் உதயசீலன் கற்கண்டு தெரிவித்துள்ளார்.
அத்துடன் அந்த அறிக்கையின் சாராம்சமானது முற்றுமுழுதாக ஒரு முடிவு தெரியப்பட்டு ஒரு அறிக்கை எழுதப்பட்டால் எப்படி இருக்குமோ அதற்கேற்ற மாதிரி எழுதப்பட்டுள்ளதாகவும் போர், யுத்தம் போன்ற வசனங்கள் அதில் இல்லை எனவும் முற்றுமுழுதாக இது சடங்கு ரீதியானது நாணயங்கள் எல்லாம் 1870 ஆம் ஆண்டுக்குரியவை என்றும் பின்னர் 90 ஆம் ஆண்டு வரைக்கும் இடைக்கிடையே குறிப்பிட்டுள்ள நிலையில் ஒரு சடங்கு ரீதியானது என்ற நோக்கில் தான் அந்த அறிக்கை இருப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
ஐபிசி தமிழின் மனங்கள் பேசட்டும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி புதைகுழியில் இரண்டு விதமாக எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அதாவது குவியல்களாகவும் தனித்தனியாகவும் எடுக்கப்பட்டுள்ளன.
அறிக்கையின் சாராம்சத்தின்படி, தனித்தனியாக புதைக்கப்பட்டவற்றில் 72 வீதமானது வடமேற்கு திசையை நோக்கியதாக இருப்பதாகவும், சவப்பெட்டிகளின் ஆணிகள் இருந்ததாகவும் என்ற விடயங்களைச் சொல்லி இது ஒரு சடங்கு ரீதியாக புதைக்கப்பட்டதாக இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் குவியல்களாக இருப்பவை தொற்றுநோயால் இறந்தவர்களாக இருக்கலாம் என்று சொல்கின்றார். அமர்த்தி வைக்கப்பட்ட நிலையில் இருந்த எலும்புக்கூடுகளை இப்படி ஒரு வழமை இருந்தது என பழைய உசாத்துணைகளை எடுத்துக்காட்டி இப்படி புதைக்கின்ற ஒரு முறைமை இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் ஏற்கனவே இது பற்றி எச்சரித்திருந்தோம். 2026 ஜூன் 26 அன்று நடைபெற்ற உரிமைப்பந்தம் போராட்டத்தில் சில விடயங்களைச் சுட்டிக்காட்டியிருந்தோம்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தமது உரைகளின்போது குறைந்தபட்சம் 30 விநாடிகளாவது செம்மணியைப் பற்றிப் பேசுங்கள் என்றும் கேட்டுக்கொண்டேன்” என தெரிவித்தார்.