கடுமையான மின்னல் எச்சரிக்கை: 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
இலங்கையின் 25 மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தாக்கம் தொடர்பான எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (21) வெளியிட்டுள்ளது.
இதில் 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், ஆறு மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, மத்திய, சபரகமுவ, வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இன்று (21) முற்பகல் 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவிப்பு, நாளை (22) அதிகாலை 1.30 மணி வரை செல்லுபடியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் சில பகுதிகளில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்காக, பொதுமக்கள் வீடுகள் அல்லது பாதுகாப்பான கட்டடங்களுக்குள் தஞ்சமடையுமாறும், திறந்தவெளிகள் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகில் இருப்பதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் கம்பி இணைப்புள்ள தொலைபேசிகள் மற்றும் மின்சாரத்துடன் இணைக்கப்பட்டுள்ள உபகரணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், முறிந்து விழுந்த மரங்கள் மற்றும் மின்கம்பிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், அவசர உதவிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் உள்ளூர் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.