பாரிஸ் வீதிகளிலிருந்து விண்வெளி வரை: பூமிக்கு உயிருடன் மீண்டும் சோகத்தில் முடிந்த தெருப்பூனையின் பின்னணி

பாரிஸ் வீதிகளிலிருந்து விண்வெளி வரை: பூமிக்கு உயிருடன் மீண்டும் சோகத்தில் முடிந்த தெருப்பூனையின் பின்னணி

விண்வெளிக்குச் சென்று உயிருடன் பூமிக்குத் திரும்பிய ஒரே பூனையான ஃபெலிசெட், மூளை ஆராய்ச்சித் தேவைக்காக இரண்டு மாதங்களுக்குப் பின் சோகமான முறையில் கருணைக் கொலை செய்யப்பட்டது.

மனிதர்களின் விண்வெளிப் பயணக் கனவுகளுக்குப் பின்னால், பல உயிரினங்களின் மௌனமான தியாகங்கள் ஒளிந்திருக்கின்றன. அந்த வரிசையில், விண்வெளிக்கு அனுப்பப்பட்டு வெற்றிகரமாக உயிருடன் பூமிக்குத் திரும்பிய உலகின் ஒரே பூனை என்ற வரலாற்றுச் சாதனையைச் படைத்தது 'ஃபெலிசெட்'. எனினும், அந்த வரலாற்று சாதனைக்குக் பின்னால் ஒரு சோகமான முடிவும் ஒளிந்திருக்கிறது.

1960-களில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவது பாதுகாப்பானதா என்பதைக் கண்டறிய பல்வேறு நாடுகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டன. இதன் ஒரு பகுதியாக, பிரெஞ்சு விண்வெளி ஆராய்ச்சி மையம் விலங்குகளைப் பயன்படுத்திச் சோதனைகளைத் தொடங்கியது. இதற்காகப் பாரிஸ் நகர வீதிகளில் சுற்றித் திரிந்த பல தெருப்பூனைகள் பிடிக்கப்பட்டு, கடுமையான பயிற்சிகளுக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் இந்தச் சிறிய கருப்பு-வெள்ளை நிறப் பூனையான ஃபெலிசெட்.

1963-ஆம் ஆண்டு அக்டோபர் 18 அன்று, அன்றைய பிரெஞ்சு அல்ஜீரியாவில் அமைந்திருந்த சகாரா பாலைவனப் பகுதியிலிருந்து 'வெரோனிக் ஏஜிஐ' (Véronique AGI) என்ற ராக்கெட் மூலம் ஃபெலிசெட் விண்வெளிக்கு ஏவப்பட்டது. இந்த ராக்கெட் அதை பூமியிலிருந்து சுமார் 157 கிலோமீட்டர் உயரத்திற்கு எடுத்துச் சென்றது. விண்வெளியின் எல்லையைக் கடந்த ஃபெலிசெட், சுமார் ஐந்து நிமிடங்கள் புவிஈர்ப்பு விசையற்ற 'எடையற்ற நிலையை' அனுபவித்தது. பயணத்தின்போது அதன் மூளைச் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்காக, அதன் மண்டை ஓட்டில் பிரத்யேக மின்முனைகள் (Electrodes) பொருத்தப்பட்டிருந்தன.

ஏவப்பட்ட 13 நிமிடங்களுக்குள், ஃபெலிசெட் பயணித்த விண்கலம் பாதுகாப்பாகப் பூமிக்குத் திரும்பியது. விண்வெளிக்குச் சென்ற பல விலங்குகள் உயிரிழந்த நிலையில், ஃபெலிசெட் பாதுகாப்பாக உயிர் பிழைத்து வந்த நிகழ்வு அறிவியல் உலகில் மிகப்பெரிய சாதனையாகக் கருதப்பட்டது.

ஆனால், இந்த வரலாற்றுச் சாதனையின் முடிவு மகிழ்ச்சிகரமானதாக அமையவில்லை. விண்வெளிப் பயணம் அதனுடைய நரம்பு மண்டலத்தில் ஏற்படுத்திய தாக்கங்களை விரிவாக ஆராய்வதற்காக, பூமிக்குத் திரும்பிய இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஆராய்ச்சியாளர்களால் ஃபெலிசெட் கருணைக் கொலை (Euthanasia) செய்யப்பட்டது. அறிவியல் தகவல்களைப் பெறுவதற்காகச் செய்யப்பட்ட இந்த நடவடிக்கை, எதிர்பார்த்த அளவுக்குப் பயனுள்ள முடிவுகளைத் தரவில்லை என்பது கூடுதல் சோகம்.

இதனைத் தொடர்ந்து, அதே ஆண்டு அக்டோபர் 24 அன்று மற்றொரு பூனையும் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அந்த முயற்சி தோல்வியடைந்து அந்தப் பூனை பரிதாபமாக உயிரிழந்தது.

நாய்கள் மற்றும் குரங்குகளைப் போல ஃபெலிசெட்டின் தியாகம் பல தசாப்தங்களாகப் போதிய அங்கீகாரமின்றி மறக்கப்பட்டிருந்தது. பின்னர், 2019-ஆம் ஆண்டு பிரான்சின் ஸ்ட்ராஸ்பேர்க் நகரில் உள்ள சர்வதேச விண்வெளிப் பல்கலைக்கழகத்தில் ஃபெலிசெட்டுக்கு வெண்கலச் சிலை நிறுவப்பட்டு தகுந்த கௌரவம் அளிக்கப்பட்டது.

மனித குலத்தின் விண்வெளி சாதனைகளுக்குப் பாதையமைத்துக் கொடுத்து, இறுதியில் சோகமான முடிவைச் சந்தித்த ஃபெலிசெட்டின் கதை, விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் என்றென்றும் நினைவுகூரத்தக்க ஒரு நெகிழ்ச்சியான அத்தியாயமாகும்.