பாதுகாப்பு இலாகாவை ஜனாதிபதி வைத்திருக்க முடியும்! சட்ட நிபுணர் கருத்து

பாதுகாப்பு இலாகாவை ஜனாதிபதி வைத்திருக்க முடியும்! சட்ட நிபுணர் கருத்து

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புத் துறையை வைத்திருக்க எந்த தடையும் இல்லை என்று அரசியலமைப்பு நிபுணர் மனோகாரா டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,

“பாதுகாப்பு உள்ளிட்ட மக்களின் நிறைவேற்று அதிகாரத்தை ஜனாதிபதியால் பயன்படுத்த வேண்டும் என்று அரசியலமைப்பு தெளிவாகக் கூறுகிறது என்றார்.

ஜனாதிபதி அமைச்சரவையின் தலைவர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, ஜனாதிபதியால் அந்த இலாகாவை வைத்திருக்க முடியாது என்று சொல்வது முட்டாள்தனமானது” என மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, அரசியலமைப்புக்கான 19வது திருத்தத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சினை ஜனாதிபதி வைத்து இருக்க முடியாது என்று பிபிசி சிங்கள சேவையின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இது குறித்த அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“19வது அரசியல் அமைப்பு சட்டத் திருத்தத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சர் பதவியை வகிக்க ஜனாதிபதிக்கு சட்டபூர்வமான அதிகாரம் உள்ளதா என்ற கேள்வி இருந்த போதிலும், பாதுகாப்பு அமைச்சினை அரச தலைவர் கோட்டாபாய ராஜபக்ச தனது கட்டுப்பாட்டில் வைத்து இருக்கின்றார்.

அரசியல் அமைப்பின் 19வது திருத்தத்தின் 51வது சரத்தின் கீழ், தற்போதைய ஜனாதிபதி அரசியல் அமைப்பில் கூறப்பட்டு உள்ளதைப் பொருட்படுத்தாமல், அந்த காலத்தின் இறுதி வரை, தேசிய பாதுகாப்பு, மகாவலி மேம்பாடு, சுற்றுச்சூழல் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகள் என்ற விடயத்தை எடுத்துக் கொள்ளலாம்.

அல்லது எந்த அமைச்சுக்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை அவரால் தீர்மானிக்க முடியும்.

அதன்படி, அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் முடியும் வரை மட்டுமே இது போன்ற விடயங்களை நடத்த ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டது” என்று அதில் மேலும் தெரிவிக்கப்பபட்டு உள்ளது.