செம்மணியில் புதைக்கப்பட்ட குழந்தைகள் : அவுஸ்திரேலிய நாடாளுமன்றில் ஒலித்த குரல்!
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் அவுஸ்திரேலிய பசுமைக் கட்சியின் செனட்டர் டேவிட் ஷூபிரிட்ஜ் அந்நாட்டு அரசாங்கத்திடம் முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
அதன்படி, மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் முறையான மற்றும் சுயாதீனமான விசாரணை நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கை அரசுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இதனைக் குறிப்பிட்ட அவர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும் இந்த விவகாரத்தை தீவிரமாக எழுப்ப வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
முழுமையான மற்றும் வெற்றிகரமான விசாரணைகள்
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை நீதி மற்றும் பொறுப்புக்கூறலை அடைவதற்குத் தனது ஆதரவை வழங்கும் என்று அவுஸ்திரேலியா முன்னர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான சரியான நேரம் இது.
முழுமையான தளம் பாதுகாக்கப்படுவதையும், மனித எச்சங்கள் மற்றும் சாட்சியங்களுக்கான சுயாதீனமான தடயவியல் சங்கிலிப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதையும் அவுஸ்திரேலிய அரசு தூண்ட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் செம்மணியில் இடம்பெற்ற மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் கடந்த 19ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ள நிலையில், அங்கு மீட்கப்பட்ட மனித எச்சங்களின் மொத்த எண்ணிக்கை 583 ஆக உயர்ந்துள்ளது.
எனினும், இவ்வளவு அதிகமான மனித எச்சங்கள் மீட்கப்பட்ட போதிலும் இலங்கை அரசாங்கம் இது குறித்து இதுவரை மௌனம் காத்தே வருகின்றது.
மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கையில் சுமார் 20 புதைகுழி தளங்களை ஆவணப்படுத்தியுள்ள போதிலும், அவற்றில் எதற்கும் இதுவரை முழுமையான மற்றும் வெற்றிகரமான விசாரணைகள் நடத்தப்படவில்லை.” என தெரிவித்துள்ளார்.
சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுத்தல்
இதேவேளை நம்பகமான மற்றும் முழுமையான விசாரணைகளை மேற்கொள்வதில் தொடர்ந்தும் தவறிழைத்துள்ள இலங்கை அரசாங்கம், உள்ளூர் பொறிமுறைகளில் தமிழ் சமூகம் எத்தகைய நம்பிக்கையையும் வைக்க முடியாது என அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்டுள்ள தமிழ் ஏதிலிகள் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, உடனடியாகச் சுயாதீன விசாரணையொன்றை முன்னெடுப்பதோடு, சாட்சியங்களைப் பாதுகாத்து, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அந்தப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.