
புதிய இராஜாங்க அமைச்சரான தமிழர் வெளியிட்ட விடயம்
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பி அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் அர்ப்பணிப்புடன் செயற்படப்போவதாக தபால் மற்றும் வெகுஜன ஊடகத்துறை புதிய இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.
கண்டி தலதா மாளிகை வளாகத்தில்(12) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் வியாழேந்திரன் தபால், வெகுசன ஊடகத்துறை இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
அதனையடுத்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தேர்தல் தொனிப்பொருளிலும் தாம் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளதை நினைவுகூர்ந்த இராஜாங்க அமைச்சர், பல்வேறு தேவைகளுடன் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் மக்களுக்கு சேவை செய்வதை நோக்காகக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கத்துடன் இணைந்து தமது தொழில்சார் அனுபவங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
குறிப்பாக யுத்தத்தினால் பாதிப்படைந்த மக்கள் தமது வாழ்வாதாரம் உள்ளிட்ட தேவைகளை பெற்றுக்கொள்வதற்காகவே அதிகளவு வாக்குகளால் தம்மை தெரிவு செய்துள்ளார்கள் என்றும் மக்கள் எதிர்பார்ப்பை உச்சளவில் தாம் நிறைவேற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.