இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள ஆயத்தமாகும் இந்திய பாதுகாப்பு அமைச்சர்

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள ஆயத்தமாகும் இந்திய பாதுகாப்பு அமைச்சர்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். 

குறித்த விஜயம் செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் இடம்பெறும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் தொடர்பாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையில் அண்மையில் கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றுள்ளது. 

இந்த விஜயத்தின் போது இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உட்பட அரசாங்கத்தின் உயர் மட்டப் பிரதிநிதிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டு நடவடிக்கைகள், பயிற்சித் திட்டங்கள், பிராந்திய பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இந்த விஜயத்தின் போது அவதானம் செலுத்தப்படவுள்ளது. 

2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கைக்கு விஜயம் செய்யவிருந்த நிலையில், அவ்விஜயம் பின்னர் இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.