விபத்திற்குள்ளாகிய 22 வாகனங்கள் - கண்டு கொள்ளாத மாநகர சபை

விபத்திற்குள்ளாகிய 22 வாகனங்கள் - கண்டு கொள்ளாத மாநகர சபை

நுவரெலியா மாநகர சபையின் அசமந்தப் போக்கு காரணமாக பல வாகனங்கள் விபத்திற்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மக்கள் கருத்து தெரிவிக்கையில், நுவரெலியா பூங்கா வீதிக்கு செல்லும் காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்கு முன்னால் அமைந்துள்ள பாதையின் ஒரு புறம் கடந்த பல மாதங்களாக புனமைப்பு செய்யப்பட்டு வருகின்றது.

இந்தப் பகுதியில் மழை காலங்களில் நீர் நிரம்பி அங்குள்ள கடைதொகுதிகளில் நீர் புகுந்து விடுகின்றமை காரணமாக அந்த பகுதியை புனரமப்பதற்கு நுவரெலியா மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த புனரமப்பானது மிக நீண்ட காலமாக முன்னெடுக்கப்பட்டு வருவதோடு இதனை எந்தவிதமான திட்டமிடலும் இன்றி முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இதன் ஒரு பகுதியில் பாரிய குழி ஒன்று தோண்டப்பட்டுள்ள நிலையில் அதனை மூடுவதற்கான நடவடிக்கைகளை நுவரெலியா மாநகர சபை எடுக்கவில்லை. இதன் காரணமாக இதுவரை 22 வாகனங்கள் விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதுவரை பல விபத்துகள் அந்த பகுதியில் ஏற்பட்டிருந்த போதிலும் அதனை நுவரெலியா மாநகர சபை கண்டு கொள்வதில்லை என விசனம் தெதரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நுவரெலியா மாநகர சபையின் முதல்வரிடம் கேட்ட பொழுது, அந்த பகுதி பொறியியலாளர்களின் திட்டமிடலின் அடிப்படையில் அபிவிருத்தி செய்யப்படுவதாகவும் அங்கு ஒரு தவறு ஏற்பட்டுள்ளதாகவும் அதனை உடனடியாக திருத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.