30 கோடி வருஷத்துக்கு முன் உங்க வீடு எங்க இருந்தது தெரியுமா? பூமி வரலாற்றை காட்டும் புதிய வெப்சைட்!

30 கோடி வருஷத்துக்கு முன் உங்க வீடு எங்க இருந்தது தெரியுமா? பூமி வரலாற்றை காட்டும் புதிய வெப்சைட்!

புவி அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள இந்த மென்பொருள், கடந்த 32 கோடி ஆண்டுகால கண்டப் பெயர்ச்சி (Continental drift) வரலாற்றை நம் கண்முன்னே நிறுத்துகிறது.

இன்று நாம் காலையில் எழுந்து காபி குடித்துக் கொண்டே வேடிக்கை பார்க்கும் நம் வீட்டுப் பின்வாசல் தோட்டம், பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்தில்தான் இருந்ததா? அல்லது உலக உருண்டையின் வேறு எங்கோ ஒரு மூலையில் இருந்ததா? என்னப்பா கேள்வி இது, நிலம் எப்படி நகரும்? என்று நீங்க நினைத்தால், அதுதான் இல்ல. பல நூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நாம் வாழும் இந்த நிலப்பரப்பு, உலகின் முற்றிலும் வேறு ஒருபகுதியில், வேறுஒரு காலநிலையின் கீழ் இருந்தது. இப்போது, இதை உங்க மொபைல் அல்லது லேப்டாப்பில் இருந்தபடியே துல்லியமாகக் கண்டுபிடித்துவிடலாம்.

பூமி அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள Paleolatitude.org என்ற புதிய இணையதள மேம்பாடு, கடந்த 32 கோடி ஆண்டுகளில் கண்டப் பெயர்ச்சி காரணமாக, பூமியின் எந்தவொரு குறிப்பிட்ட இடமும் உலக வரைபடத்தில் எப்படி நகர்ந்து வந்துள்ளது என்பதைத் துல்லியமாகக் காட்டி நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. இதுவரை விஞ்ஞானிகள் மற்றும் தொல்பொருள் ஆய்வாளர்கள், பூமியில் வாழ்ந்த உயிரினங்களும் அவற்றின் சூழலும் 'காலப்போக்கில்' எப்படி மாறின என்பதை மட்டும்தான் ஆராய்ந்துவந்தனர். ஆனால், இந்த புதிய இணையதள கருவி, அதன் உடன் 'இடம்' என்ற அதிமுக்கியமான மூன்றாவது பரிமாணத்தைச் சேர்த்துள்ளது.

ஒரு குறிப்பிட்ட உயிரினத்தின் புதைபடிவம் (Fossil) கிடைக்கும்போது, அது வாழ்ந்த இடம் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு உலக உருண்டையில் எந்த அட்சரேகையில் இருந்தது என்பதை இதன் மூலம் துல்லியமாகக் கணக்கிட முடியும். இது, அந்த காலத்தின் பல்லுயிர் பெருக்கத்தையும், காலநிலை மாற்றங்களையும், உயிரினங்கள் எப்படிப் பரிணாம வளர்ச்சி அடைந்தன அல்லது அழிந்து போயின என்பதைப் புரிந்துகொள்ளவும் ஒரு 'மாஸ்டர் கீ' ஆக அமைந்துள்ளது.

இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக நெதர்லாந்தில் உள்ள வின்டர்ஸ்விக் (Winterswijk) என்ற அகழ்வாராய்ச்சி தளத்தைக் கூறலாம். அங்கு கிடைத்த 24.5 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய தாவரங்கள் மற்றும் விலங்குகளின் புதைபடிவங்களை ஆராய்ந்தபோது, அவை தற்போதைய ஐரோப்பாவின் மிதமான காலநிலைக்குப் பழகியவை அல்ல; மாறாக மிகவும் வெப்பமான காலநிலைக்கு ஏத்தவாறு வளர்ந்தவை என்பது தெரிந்தது.

விஞ்ஞானிகள் இந்த புதிய 'உட்ரெக்ட் பேலியோஜியோகிராபி மாதிரி'யை (Utrecht Paleogeography Model) வைத்துப் பார்த்தபோதுதான் அசல் உண்மை வெளிவந்தது. சுமார் 24.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, இன்றைய நெதர்லாந்து நிலப்பரப்பு தற்போதைய அரேபிய தீபகற்பத்திற்கு இணையான அட்சரேகையில் அமைந்திருந்தது. அதாவது, அந்தப் பகுதி ஒரு காலத்தில் பாரசீக வளைகுடாவைப் போன்ற தகிக்கும் வெப்பமான சூழலில் இருந்துள்ளது! பூமி ஒட்டுமொத்தமாக வெப்பமடையவில்லை, அந்த நிலப்பரப்பே அப்போது வேறு இடத்தில் இருந்ததுதான் இதற்குக் காரணம்.

இந்த Paleolatitude.org தளம் வெறும் ஆராய்ச்சியாளர்களுக்கானது மட்டுமல்ல; சாமான்ய மக்களும் பயன்படுத்தும் வகையில் மிக சுவாரசியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்க இந்த இணையதளத்திற்குச் சென்று, உங்கள் தற்போதைய இருப்பிடத்தை (Location) உள்ளிட்டால் போதும். கடந்த பல மில்லியன் ஆண்டுகளில் உங்கள் நிலம் உலக வரைபடத்தில் எப்படியெல்லாம் ஊர் சுற்றி வந்துள்ளது, எந்தெந்த காலநிலை மண்டலங்களை கடந்து வந்துள்ளது என்பதை ஒரு டைம் ட்ராவல் போல உங்கள் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்திவிடும்.

ஆராய்ச்சியாளர்களுக்குத் தேவையான வரைபடங்களை உருவாக்குவது, பெரிய அளவிலான அட்சரேகை ஆய்வுகளைப் பதிவேற்றுவது போன்ற வசதிகளும் இதில் உள்ளன. லேட் ஜுராசிக் காலத்தைச் சேர்ந்த சுமார் 3,400 கடல்சார் புதைபடிவங்களை இந்தத் தளத்தில் பதிவேற்றி, அந்த காலத்தில் உலகின் எந்தப் பகுதியில் பல்லுயிர் வேறுபாடுகள் அதிகமாக இருந்தன என்பதை விஞ்ஞானிகள் மிகத் துல்லியமாக வரைபடமாக்கி உள்ளனர்.

கடந்த காலத்தில் தீவிரமான காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டபோது, எந்தெந்த பகுதிகள் முதலில் வாழத் தகுதியற்றதாக மாறின? உயிரினங்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள எந்தப் பகுதிகளைத் தஞ்ச புகலிடங்களாக மாற்றின? அவை எப்படி இடம்பெயர்ந்தன? போன்ற கேள்விகளுக்கு இக்கருவி பதிலளிக்கிறது. கடந்த காலத்தின் இந்தத் தரவுகள், தற்போதைய புவி வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றங்களால் நமது எதிர்காலச் சூழல் எப்படி மாறும் என்பதைக் கணிக்கவும், பல்லுயிர்களைப் பாதுகாக்கவும் விஞ்ஞானிகளுக்கு ஒரு வழிகாட்டியாக அமையும்.

தற்போது இந்த தளம் 32 கோடி ஆண்டுகால பூமி வரலாற்றை மட்டுமே காட்டுகிறது. ஆனால், இந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, பூமியின் இன்னும் ஆழமான கடந்த காலத்திற்கு இதனைக் கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, சிக்கலான உயிரினங்கள் மிக வேகமாகப் பரிணாம வளர்ச்சி அடைந்த, சுமார் 50 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த 'கேம்ப்ரியன் வெடிப்பு' (Cambrian explosion) காலத்தையும் இதில் இணைக்கப் போகிறார்கள்.

நீங்க பரபரப்பான பெருநகரத்தில் இருந்தாலும் சரி, அல்லது அமைதியான கிராமத்தில் இருந்தாலும் சரி, உங்கள் காலடியில் இருக்கும் இந்த நிலம் பல பெருங்கடல்களைக் கடந்து, பல்வேறு கண்டங்களைத் தாண்டி, பல கோடி ஆண்டுகாலப் பழமையான வரலாற்றைத் தன் நெஞ்சில் சுமந்து வந்துள்ளது என்பதை இந்தத் தொழில்நுட்பம் நமக்கு உணர்த்துகிறது. சுருக்கமாகச் சொன்னால், உங்க வீட்டுப் பின்வாசல் வழியே உங்களை பிரம்மாண்டமான உலக வரலாற்றோடு மிக நெருக்கமாக இணைக்கிறது இந்த இணையதளம்.