யாழ்.போதனாவிற்கு நோயாளியாக சென்றவர் சுகதேகியாகி செய்த நெகிழ்ச்சி சம்பவம்
தனக்கு மறுபிறவி போன்ற வாழ்வை அளித்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நன்றியறிதலாக, கேதீஸ்வரன் என்பவர் பெறுமதியான ஒரு மருத்துவ உபகரணத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த,சத்தியமூர்த்தியிடம் குறித்த நன்கொடை உபகரணத்தை வழங்கி வைத்துள்ளார்.
அது குறித்து மேலும் தெரியவருவதாவது
2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் எல். கேதீஸ்வரன் கடுமையான வயிற்று வலியுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அவருக்கு குடலளில் ஏற்பட்ட கடுமையான நோய் (Intestinal Perforation) மற்றும் கடுமையான வயிற்றுப் பகுதி தொற்று (Peritonitis) ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
அதனை அடுத்து அவருக்கு அவசர சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் 25 நாட்களுக்கும் மேலாக அவசர மற்றும் காய சிகிச்சை தீவிர சிகிச்சைப் பிரிவில் (ATICU) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
அறுவைச் சிகிச்சை நிபுணர்கள், தீவிர சிகிச்சை மருத்துவர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் பல்வேறு வைத்திய நிபுணர்கள் இணைந்து அர்ப்பணிப்புடனும் கருணையுடனும் அவரைக் காப்பாற்ற பாடுபட்டனர்.
குடும்பத்தினரின், நண்பர்களின் மற்றும் பாடசாலைத் தோழர்களின் உறுதியான ஆதரவுடனும் மருத்துவக் குழுவின் சிறப்பான சேவையுடனும் அவர் படிப்படியாக குணமடைந்து, சுமார் ஒரு வருடத்தின் பின்னர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார்.
தனக்கு மறுபிறவி போன்ற வாழ்வை அளித்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நன்றியறிதலாக, கேதீஸ்வரன் தனது நண்பர்களுடன் இணைந்து பெறுமதியான ஒரு மருத்துவ உபகரணத்தை நன்கொடையாக வழங்கினார்.
மேலும், சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்டவராகிய அவர், வைத்தியசாலை வளாகத்தில் பூக்கும் மரங்களை நடுவதன் மூலம் நோயாளிகள், பார்வையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அழகானதும் மன அமைதியளிப்பதுமான சூழலை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார்.
கேதீஸ்வரன் அவர்களின் வாழ்க்கைப் பயணம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சுகாதாரப் பணியாளர்களின் அர்ப்பணிப்பு, குழு ஒத்துழைப்பு மற்றும் மனிதநேயத்தின் சிறந்த சான்றாக விளங்குகிறது.
“யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை எனக்கு ஒரு புதிய வாழ்க்கையை வழங்கியது. என்னைக் கவனித்த மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் நான் என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன் என எல். கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.