உள்ளூர் கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போட்டிகளிலிருந்து விஜய் சங்கர் ஓய்வு!
இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் இந்திய உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடர்களில் இருந்து தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில், “புதிய வாய்ப்புகளைத் தேடவும், தொடர்ந்து அதிக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவும்” இந்த முடிவை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
2012-ல் தமிழ்நாடு அணிக்காக அறிமுகமாகி 13 ஆண்டுகள் விளையாடினார். பின்னர், 2025-26 சீசனில் திரிபுரா அணிக்காக விளையாட ஒப்பந்தமானார். மொத்தம் 77 முதல்தர போட்டிகளில் 4,253 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.
இந்தியாவுக்காக 12 ஒருநாள் மற்றும் 9 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி, மொத்தம் 324 ரன்களும் 9 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.
2013ஆம் ஆண்டு ஐபிஎல்லில் சென்னை அணிக்காக அறிமுகமானார். தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் , டெல்லி கேபிடல்ஸ் , மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். 78 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 1,233 ரன்கள் மற்றும் 9 விக்கெட்டுகளைப் பெற்றுள்ளார்.
2025 ஐபிஎல் தொடரில் தனது சொந்த அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். அந்த சீசன் எதிர்பார்த்த அளவில் அமையாததால், நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடரில் எந்த அணியும் இவரை ஏலத்தில் எடுக்கவில்லை.