தமிழின அழிப்பின் 17ஆம் ஆண்டு : கண்ணீரால் நனைந்த முள்ளிவாய்க்கால் முற்றம் - நேரலை
புதிய இணைப்பு
இலங்கையில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையின் 17ஆவது நினைவு தினம் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சற்றுமுன்னர் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமாகியுள்ளது.
காலை 10:15 க்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழினப் படுகொலை நினைவுத்தூபியில் பொதுச் சுடரேற்றப்பட்டது.
இதனையடுத்து, மதகுருமார்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் நினைவுத்தூபியில் கண்ணீர் மல்க உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முதலாம் இணைப்பு
2009ஆம் ஆண்டு இலங்கையில் அரங்கேற்றப்பட்ட தமிழின அழிப்பின் போது உயிர் நீத்தவர்களை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 17ஆம் ஆண்டு நிகழ்வுகள் இன்று தமிழர் தாயகமெங்கும் நடைபெறவுள்ளன.
அதற்கமைய முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இன்று (18) காலை முதல் உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் நடைபெறவுள்ளது.
இன்று காலை ஆறு மணி முதல் 09 மணி வரை, முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரைப் பகுதியில், இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த உறவுகளுக்கான பிதிர்க்கடன் மற்றும் ஆத்மசாந்திப் பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
பொதுச்சுடர் ஏற்றுதல்
அதனைத் தொடர்ந்து, முற்பகல் 10:15 க்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்படவுள்ளது.
அத்துடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் முற்பகல் 10.29க்கு நினைவொலி எழுப்பப்பட்டு, 10.30 க்கு இரண்டு நிமிடங்கள் அகவணக்கம் செலுத்தப்படவுள்ளது. அதனை தொடர்ந்து, முற்பகல் 10:31க்கு பொதுச்சுடர் மற்றும் சமநேரத்தில் ஒற்றைச் சுடர்கள் ஏற்றப்படும்.

இந்த நிலையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த பெருந்திரளான உறவுகள் இன்றைய நினைவேந்தலில் கலந்து கொள்வதற்காக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்திற்கு வருகை தந்துள்ளனர்.
2009 ஆம் ஆண்டு நடந்த இனவழிப்புக்கு எதிராக எதிர்ப்பைப் பதிவு செய்யவும், உலகிடம் நீதியைக் கோரவும் இந்த நினைவேந்தல் மிக முக்கியமானது என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
அரசியலைக் கடந்து தமிழ்த்தேசமாக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும், முள்ளிவாய்க்கால் மண்ணில் அணி திரண்டு எமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துமாறும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.