ஒரே இடத்தில் 1,000 டன் தங்கம், ரூ.7 லட்சம் கோடி மதிப்பு; சீனாவில் கண்டறியப்பட்ட தங்க மலை

ஒரே இடத்தில் 1,000 டன் தங்கம், ரூ.7 லட்சம் கோடி மதிப்பு; சீனாவில் கண்டறியப்பட்ட தங்க மலை

சுமார் 1,000 மெட்ரிக் டன் தங்கம் கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதன் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் ஆகும். சுமார் 2,000 மீட்டர் ஆழத்தில் 300 டன் தங்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகப் பொருளாதாரத்தையே அதிர வைக்கும் ஒரு பிரம்மாண்ட செய்தி சீனாவிலிருந்து வெளியாகியுள்ளது. அந்நாட்டின் மத்திய பகுதியில் உள்ள ஹுனான் மாகாணத்தில், கற்பனை செய்ய முடியாத அளவிற்கு தங்கம் கொட்டிக்கிடக்கும் மிகப்பெரிய தங்க வயல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

சீனாவின் பிங்ஜியாங் கவுண்டியில் உள்ள 'வாங்கு' (Wangu) என்ற பகுதியில் நிலத்தடியில் ஆய்வு செய்தபோது, அங்கு 40-க்கும் மேற்பட்ட தங்க நரம்புகள் ஓடுவது கண்டறியப்பட்டது. ஆரம்பக்கட்ட ஆய்வுகளின்படி, இங்கு 1,000 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான தங்கம் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் சந்தை மதிப்பு சுமார் 600 பில்லியன் யுவான். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 7 லட்சம் கோடி ரூபாய். இது பல நாடுகளின் மொத்த பட்ஜெட்டையே விட அதிகம்.

இந்தச் செய்தியில் மிகவும் ஆச்சரியமான விஷயம் தங்கத்தின் இருப்பு மட்டுமல்ல, அதன் தரம் தான். பொதுவாக, ஒரு சுரங்கத்தில் ஒரு டன் பாறையைத் தோண்டி எடுத்தால் அதில் 10 கிராமுக்கும் குறைவாகவே தங்கம் கிடைக்கும். ஆனால், சீனாவில் கண்டறியப்பட்டுள்ள இந்த இடத்தில் ஒரு டன் தாதுவில் 138 கிராம் தங்கம் வரை உள்ளது. பாறை மாதிரிகளில் தங்கம் வெறும் கண்ணுக்கே பளபளப்பாகத் தெரிகிறது என ஆய்வாளர்கள் உற்சாகத்துடன் தெரிவிக்கின்றனர்.

தற்போது தென்னாப்பிரிக்காவில் உள்ள 'சவுத் டீப்' (South Deep) சுரங்கம் தான் உலகின் மிகப்பெரிய தங்க இருப்பு கொண்ட இடமாகக் கருதப்படுகிறது (900 டன்). ஆனால், சீனாவின் இந்த 'வாங்கு' சுரங்கம் 1,000 டன்னைத் தாண்டினால், உலகின் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் என்ற பெருமையை இது பெரும்.

இவ்வளவு தங்கம் ஓரிடத்தில் எப்படி உருவானது? இதற்கு விஞ்ஞானிகள் ஒரு புதிய விளக்கத்தைத் தருகின்றனர். நிலநடுக்கத்தின் போது பாறைகளில் ஏற்படும் அழுத்தத்தால் உருவாகும் 'மின்னூட்டம்' (Piezoelectricity), நிலத்தடியில் ஓடும் திரவங்களிலிருந்து தங்கத்தை மிக வேகமாகப் பிரித்து ஒரே இடத்தில் படிய வைக்கிறது. இதுவே இவ்வளவு பெரிய தங்கப் படிமங்கள் உருவாகக் காரணமாக இருக்கலாம் என Nature Geoscience இதழ் கூறுகிறது. உலகத் தங்க உற்பத்தியில் சீனா ஏற்கனவே முதலிடத்தில் உள்ளது. இப்போது இந்த மெகா கண்டுபிடிப்பின் மூலம், உலகத் தங்க விநியோகம் மற்றும் அதன் விலையைத் தீர்மானிப்பதில் சீனாவின் பிடி மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.