ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக விரைவில் புதிய கடும் சட்டம்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக விரைவில் புதிய கடும் சட்டம்

இன்னும் இரண்டு வாரங்களுக்குள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக மாத்திரம் நடைமுறைப்படுத்தப்படும் வகையில் தயாரிக்கப்பட்ட மிகக் கடுமையான விதிகளைக் கொண்ட புதிய சட்டமொன்று கொண்டு வரப்படவுள்ளதாக மத்திய குற்ற விசாரணை பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன கொடிதுவக்கு தெரிவித்தார். 

போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒடுக்குவது தொடர்பில் அத தெரண "BIG FOCUS" நிகழ்ச்சியில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

புதிய சட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் விதிகளின் ஊடாக, குற்றவாளிகளாகக் காணப்பட்டு சிறையிலுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை மீண்டும் பொலிஸ் பொறுப்பிற்கு எடுத்து விசாரணைகளை முன்னெடுக்க முடியும் என அவர் இதன்போது விளக்கமளித்தார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்: 

"இன்றும் இவ்வாறான நபர்களை நாம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழேயே தடுத்து வைத்துள்ளோம். இது தொடர்பாக இன்னும் இரண்டு வாரங்களுக்குள் மிகக் கடுமையான சட்டம் ஒன்று வரவுள்ளது. இது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒரு மிக வலுவான சட்டமாகும். 

குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு சிறையில் இருக்கும் பல 'பெரிய பெயர்களைக்' கொண்ட நபர்கள் இருக்கிறார்கள்; மக்கள் வீணாகப் பயப்படும் பெயர்களைக் கொண்டவர்கள் அவர்கள். ஆனால் அவர்கள் மீண்டும் செய்யும் குற்றங்களுக்காக, அவர்களை சிறையிலிருந்து வெளியே கொண்டு வந்து பொலிஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தும் அதிகாரம் இந்தப் புதிய சட்டத்தின் மூலம் கிடைக்கும். இனி யாரும் சிறைக்குள் இருந்து கொண்டு அவ்வாறு குற்றச் செயல்களைச் செய்ய முடியாது. 

இன்னும் பல விடயங்கள் உள்ளன. வெளிநாடுகளில் இருப்பவர்களின் சொத்துக்களை முழுமையாக முடக்குவதற்கு தற்போது சட்டம் உள்ளது. சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்கள் என்ற அடிப்படையில், கடந்த காலங்களில் நாம் பில்லியன் கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்களை அரசாங்கத்தின் பொறுப்பிற்கு எடுத்துள்ளோம்." என்றார்.