நடிகை மீரா மிதுனுக்கு பாரதிராஜா கண்டனம்!
முன்னணி நடிகர்களை தவறாக பேசி வரும் நடிகை மீரா மிதுனுக்கு இயக்குனர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “சமீபமாகக் கேட்கும் அல்லது பார்க்கும் பல சம்பவங்கள் அதிர்ச்சியைத் தருகிறது.
புகழ் போதையில் ஒருவரையொருவர் இகழ்வதும் இன்னொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அவதூறு பேசுவதும் அதைச் சமூக ஊடகங்கள் வெளிக்கொணர்வதும் கண்ணாடி வீட்டிற்குள்ளிருந்து கல்லெறிந்து கொள்வதைப் போலவும் மல்லாக்க படுத்துக்கொண்டு எச்சிலை உமிழ்வதைப் போலவும் தமிழ்சினிமா வெளியில் அரங்கேறுவது ஆபத்தான கலாசாரம் தொடங்கியுள்ளதோ என ஐயம் கொள்கிறேன்.
இதோ நம் அன்புத் தம்பி விஜய், சூர்யா போன்றோர் எத்தகைய அடித்தளங்களை அமைத்து இந்த உயரத்திற்கு வந்துள்ளனர். கவர்ச்சிகரமான இந்தத் துறையில் தன் பெயர் கெட்டுவிடாத அளவுக்கு எப்படி தங்கள் வாழ்க்கை முறையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
திருமணம் செய்து கண்ணியமான குடும்ப வாழ்க்கையை அழகுறக் கட்டமைத்துள்ளனர் என்பதை இத்தனை ஆண்டு கால அவர்களின் வாழ்க்கை நம் முன் கண்ணாடி போல் நிற்கிறதே!
அழகிய ஓவியத்தின் மீது சேறடிப்பது போல மீரா மிதுன் என்கிற பெண் தன் வார்த்தைகளைக் கடிவாளம் போடாமல் வரம்பு மீறி சிதறியுள்ளார். திரையுலகில் பயணிக்கும் ஒரு மூத்த உறுப்பினராக நான் இதைக் கண்டிக்க கடமைப்பட்டுள்ளேன்.
சிறு பெண் பக்குவமில்லாமல் புகழ் வெளிச்சம் தேடிப் பேசுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். கெளரவமாக வாழும் கலைஞர்களின் குடும்பத்தைப் பற்றி அவதூறு பேசுவதை சினிமா கலைஞர்கள், துறை சார்ந்தவர்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். இதுவரை பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.