சீரற்ற வானிலை ; 474 ஆக அதிகரித்த பலி எண்ணிக்கை

சீரற்ற வானிலை ; 474 ஆக அதிகரித்த பலி எண்ணிக்கை

சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 474 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் அடங்கிய அறிக்கையை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (03) காலை 10.00 மணிக்கு வெளியிட்டுள்ளது.

சீரற்ற வானிலை ; 474 ஆக அதிகரித்த பலி எண்ணிக்கை | Ditwah Cyclone Srilanka Death Toll Rises To 474

குறித்த அறிக்கையின் புள்ளிவிபரங்களின்படி, அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 474 ஆக அதிகரித்துள்ளதுடன், 356 பேர் காணாமல் போயுள்ளனர்.

இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, 25 மாவட்டங்களிலும் 448,817 குடும்பங்களைச் சேர்ந்த 1,586,329 பேர் (சுமார் 15 இலட்சத்து 86 ஆயிரத்து 329 பேர்) பாதிக்கப்பட்டுள்ளனர்.

இடம்பெயர்ந்த மக்களுக்காக நாடளாவிய ரீதியில் 1,385 பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்முகாம்களில் 53,758 குடும்பங்களைச் சேர்ந்த 201,875 பேர் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சொத்து சேதங்களைப் பொறுத்தவரையில், 971 வீடுகள் முழுமையாகவும், 40,358 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 89 பேர் உயிரிழந்துள்ளதுடன், 73 பேர் காணாமல் போயுள்ளனர் என மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். மொத்தம் 6,959 குடும்பங்களைச் சேர்ந்த 24,681 பேர் இந்த பேரிடரில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 2,934 குடும்பங்களைச் சேர்ந்த 11,453 பேர் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 123 தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

 

Gallery