யாழ் பருத்தித்துறை வைத்தியசாலையில் இரவில் நடந்த களேபரம்!
யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குள் கத்தியுடன் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர், அம்புலன்ஸ் சாரதி மற்றும் வைத்தியசாலையில் பாதுகாப்புக் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உயிர்மாய்ப்பதற்கு முயற்சித்த இளைஞர் ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இரவு வைத்தியசாலைக்குள் சென்ற , வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞரின் விவரத்தைக் கூறி அந்த இளைஞரைப் பார்வையிடுவதற்கு வழிகாட்டுமாறு அம்புலன்ஸ் சாரதி ஒருவரைக் கேட்டுள்ளார்.
இந்நிலையில் அவரின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த அம்புலன்ஸ் சாரதி, வழிகாட்ட மறுத்ததால் , அம்புலன்ஸ் சாரதி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தை அடுத்து குறித்த நபரை கைது செய்வதற்காகப் பொலிஸ் உத்தியோகஸ்தர் சென்றபோது, அவர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதையடுத்து, அந்த நபர் ஏனைய பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபரை சோதனை செய்த போது, அவரது உடைமையில் இருந்து கத்தியொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இந்நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறும் இளைஞர் மீது தாக்குதல் நடத்துவதற்காக அவர் வந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்