யாழ் பல்கலை துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பதாரர்கள்: வெளியான தகவல்

யாழ் பல்கலை துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பதாரர்கள்: வெளியான தகவல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு ஆறு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் பதவிக் காலம் அடுத்த வருடம் மார்ச் மாதம் 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

இந்தநிலையில், பல்கலைக்கழகப் பேரவையின் பதவிவழிச் செயலாளரான பதிவாளரால் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

அதற்கான இறுதித் தினம் ஒக்டோபர் 15 ஆம் திகதி நிறைவடைகின்றது.

 

யாழ் பல்கலை துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பதாரர்கள்: வெளியான தகவல் | Six Apply Jaffna University Vice Chancellor Post

இந்தநிலையில், அன்றைய தினம் பிற்பகல் மூன்று மணியுடன் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் நிறைவடைந்த வேளையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பீடாதிபதிகள் நான்கு பேர் உட்பட ஆறு பேராசிரியர்கள் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இத் தகவலை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்துவதற்கு பேரவைச் செயலகத்துடன் தொடர்பு கொண்டு கேட்ட போது அது தொடர்பான தகவல்களை வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச நிறுவனமொன்று வெளிப்படைத் தன்மையுடன் ஊடகங்களுக்குத் தகவல் தெரிவிக்க மறுத்துள்ளமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ் பல்கலை துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பதாரர்கள்: வெளியான தகவல் | Six Apply Jaffna University Vice Chancellor Post

இருப்பினும், பல்கலைக்கழக வட்டாரங்களின் அடிப்படையில் உயர் பட்டப்படிப்புகள் பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி, கலைப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், மருத்துவ பீடாதிபதி பேராசிரியர் இ.சுரேந்திரகுமாரன், விஞ்ஞான பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியர் பு.ரவிராஜன், உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் முன்னாள் பீடாதிபதி சிரேஷ்ட பேராசியர் கு. மிகுந்தன் மற்றும் விஞ்ஞான பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் பிறின்ஸ் ஜெயதேவன் ஆகியோர் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்னர் என அறியமுடிகின்றது.

பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கைக்கு அமைய டிசெம்பர் மாத முற்பகுதியில் நடாத்தப்படவுள்ள விசேட பேரவைக் கூட்டத்தில், பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்படும் நிபுணர் ஒருவரின் முன்னிலையில் தெரிவுக்கான புள்ளிகள் வழங்கப்பட்டு புள்ளிகளின் அடிப்படையில் முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களின் விபரங்கள் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் கல்வி அமைச்சு ஆகியவற்றினூடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும்.

யாழ் பல்கலை துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பதாரர்கள்: வெளியான தகவல் | Six Apply Jaffna University Vice Chancellor Post

பல்கலைக் கழகச் சட்டத்தின் படி ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில், பேரவையினால் முன்மொழியப்பட்ட மூவரில் இருந்து ஒருவரைத் தெரிவு செய்து துணைவேந்தராக ஜனாதிபதி பிரகடனம் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.