2026 தரம் ஒன்று தொடர்பில் வௌியான விசேட அறிக்கை

2026 தரம் ஒன்று தொடர்பில் வௌியான விசேட அறிக்கை

2026ம் ஆண்டில் தரம் ஒன்றிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்காக முறைப்படி வகுப்புக்களை ஆரம்பித்தல் தொடர்பில் கல்வி உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. 

அதில், அரசாங்க பாடசாலைகளில் அரச உதவி பெறும்/ உதவி பெறாத தனியார் பாடசாலைகளில் 2026ம் ஆண்டில் தரம் ஒன்று மாணவர்களுக்கான வகுப்புக்களை 2026 ஜனவரி மாதம் 20ம் திகதியன்று (செவ்வாய்க் கிழமை) முறைப்படி ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுளதாகவும், அத் தினத்திற்கு முன்னர் தரம் ஒன்றிற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை பாடசாலைக்கு அனுமதித்துக் கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதன்படி, அன்றைய தினம் அதாவது, 2026.01.20ம் திகதியன்று தரம் ஒன்று மாணவர்களுக்கு முறையாக வகுப்புக்களை ஆரம்பிப்பதற்குரிய வரவேற்பு நிகழ்ச்சியில் கீழ்வரும் விடயங்களை உள்ளடக்குவது பொருத்தமாகும். 

• 2026ம் ஆண்டில் தரம் இரண்டைச் சேர்ந்த மாணவர்களைக் கொண்டு புதிய மாணவர்களை வரவேற்றல். 

• பெற்றோர் மற்றும் விருந்தினர்களை வரவேற்றல், தேசிய மற்றும் பாடசாலை கொடியேற்றம், தேசிய கீதம் மற்றும் பாடசாலை கீதம் இசைத்தல். 

• ஆரம்பக் கல்வி மறுசீரமைப்பு, தரம் ஒன்றின் புதிய கலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் நோக்கம் மற்றும் குறிக்கோள்கள் தொடர்பில் தரம் ஒன்றில் அனுமதிக்கப்படும் மாணவர்களது பெற்றோர்களை அறியப்படுத்துதல். 

• புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வினை ஆரம்ப பிரிவு மாணவர்களது பங்கேற்புடன் கலை நிகழ்வாக நடாத்துதல். 

புதிய மாணவர்களுக்கு முன்னுரிமையளிக்கும் வகையில் இந்நிகழ்வு நடாத்தப்பட வேண்டும் என்பதுடன், மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு எந்தவொரு அசௌகரியங்களும் ஏற்படாத வகையில் நிகழ்ச்சியினை ஒழுங்கு செய்வது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். 

இந்நிகழ்ச்சியினை வெற்றிகரமாக நடாத்துவதற்காக பாடசாலையின் அனைத்துப் பிரிவுகள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கம் உட்பட அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு மற்றும் பங்கேற்பினைப் பெற்றுக் கொள்வது பொருத்தமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

அவ்வாறே தரம் ஒன்றில் அனுமதிக்கப்படும் மாணவர்களுக்காக புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள பிள்ளைகளை இனங்காணல் நிகழ்ச்சித்திட்டத்தை (ஆரம்ப பாடசாலைக்கு மகிழ்ச்சிகரமானதோர் ஆரம்பம்) 2026 ஜனவரி மாதம் 02ம் திகதி முதல் 2026 ஜனவரி 16ம் திகதி வரையில் (அரச விடுமுறை தினங்கள் தவிர்த்து) தேசிய கல்வி நிறுவகத்தினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கமைய நடைமுறைப்படுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.