
யாழில் மோட்டார் சைக்கிள் பாதுகாப்பு நிலையத்தில் பகல் கொள்ளை
யாழ் (Jaffna) சந்நிதியான் ஆலயத்திற்கு அண்மையில் உள்ள மோட்டார் சைக்கிள் பாதுகாப்பு நிலையத்தில் பகல் கொள்ளை இடம்பெறுவதாக மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
தொண்டமனாறு செல்வச்சந்நிதியான் வருடாந்த மகோற்சவப் பெருவிழா தற்போது இடம்பெற்று வருகின்றது.
இந்தநிலையில், இன்று (05) மாலை சப்பறத் திருவிழாவும், நாளை காலை தேர்த்திருவிழாவும் மற்றும் நாளை மறுதினம் காலை தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.
இவ்வாறான நிலையில், தொண்டமனாறு தண்ணீர் தாங்கி அருகே உள்ள மோட்டார் சைக்கிள் பாதுகாப்பு நிலையத்தில் தலைக்கவசம் (ஹெல்மெட்) ஒன்றை பாதுகாப்பதற்கு 50 ரூபாய் அறவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்டணம் அதிகம் தொடர்பில் பொதுமக்கள், மோட்டார் சைக்கிள் பாதுகாப்பு நிலைய ஊழியரிடம் வினவிய போது அவர் வல்வெட்டித்துறை நகரசபையினர் தான் 50 ரூபாய் அறவிட சொன்னதாக குறிப்பிட்டு பொதுமக்களிடம் முரண்பட்டுள்ளார்.
இது தொடர்பில் வல்வெட்டித்துறை நகரசபை உப தவிசாளரைத் தொடர்பு கொண்ட போது, அவர் குறித்த பாதுகாப்பு நிலையம் தொடர்பில் ஏற்கனவே ஐந்தாறு முறைப்பாடுகள் கிடைத்தாக தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தங்களது வருமான வரி உத்தியோகத்தர் தலையிட்டு பற்றுச்சீட்டுக்களை பறிமுதல் செய்து எச்சரித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வாகனப் பாதுகாப்பு நிலையத்துக்கு நகரசபை சார்பில் ஒரு மோட்டார் சைக்கிளுக்கு 40 ரூபாயும் மற்றும் ஒரு தலைக்கவசத்திற்கு 20 ரூபாய் அறவிடுமாறு உத்தரவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது, கிடைத்துள்ள முறைப்பாடு தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் மற்றும் குறிக்கப்பட்ட தொகையை தாண்டி பொதுமக்களிடம் கட்டணங்கள் அறவிட்டால் ஆலயத்தின் முன்னுள்ள வல்வெட்டித்துறை நகரசபையின் உற்சவகால பணிமனையில் முறையிடுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், இவ்வாறு மோசடி இடம்பெற்றது குறித்து கேள்வி கேட்ட ஊடகவியலாளரை குறித்த பாதுகாப்பு நிலைத்தில் கடமையில் இருந்தவர் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.