எமது வெற்றியை முழு நாட்டினதும் வெற்றியாக மாற்றுவதே எங்கள் உறுதிப்பாடாகும் – மஹிந்த

எமது வெற்றியை முழு நாட்டினதும் வெற்றியாக மாற்றுவதே எங்கள் உறுதிப்பாடாகும் – மஹிந்த

இம்முறை தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாபெரும் வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது. எங்களை நம்பி, இந்த பாரிய வெற்றிக்காக வாக்களித்த அனைவருக்கும் எனது சார்பிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

நடைபெற்ற தேர்தல் தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் “இந்த மாபெரும் வெற்றி நாட்டிற்கு கிடைத்த வெற்றி என்று நான் சொல்ல வேண்டும். கொவிட் – 19 தொற்றுநோயால் உலகம் முழுவதும் செயலற்ற நிலையில் இருக்கும் நேரத்தில் இந்தத் தேர்தலை நடத்த தீர்மானித்தோம். இந்த நாட்டில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 70 வீதத்திற்கும் அதிகமானோர் வாக்களிப்பு நிலையங்களுக்கு வந்து வாக்களித்தனர்.

நிலைமை எவ்வளவு கடினமாக இருந்தாலும் ஜனநாயக முறையில் ஜனநாயகத்திற்காக பணியாற்ற மக்கள் முன்வந்திருப்பது ஒரு நாடாக நாம் மகிழ்ச்சியடைய வேண்டிய விடயமாகும். மேலும், இதுபோன்ற ஒரு ஜனநாயக தீர்மானத்தை மேற்கொண்டு அதை ஒரு தொற்றுநோய் சூழ்நிலையில் செயல்படுத்த முன்வந்த ஒரு சில நாடுகள் மட்டுமே உலகில் உள்ளன.

அத்தகைய முடிவை எடுத்த நாடு இலங்கை. தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வந்த அனைத்து மக்களின் சுகாதார பாதுகாப்பிற்காக உலக சுகாதார பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்றி இந்த தேர்தலை நடத்தி முடிப்பதற்கு தேர்தல் ஆணையம், சுகாதார சேவை, பாதுகாப்புப் படையினர் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு முடியுமானதாயிற்று.

சவால்களின் மூலம் தான் உண்மையான வெற்றி பிறக்கிறது. போரை வெல்வது, கொவிட் -19 தொற்றுநோயை வென்றது மற்றும் இது போன்ற மிக வெற்றிகரமான தேர்தலை நடத்துவது நம் நாட்டின் பலத்தையும் மக்களின் பலத்தையும் உலகுக்குக் காண்பிக்கும். இந்த தேர்தல் வெற்றி தேசத்தின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பும் வெற்றியாகும்.

இந்த தேர்தலின் வெற்றி, ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தை இந்நாட்டில் செயற்படுத்துவதற்கு முடியும் என்பதை உலகுக்கு நிரூபிக்கிறது. இந்த வெற்றியை முழு நாட்டிற்குமான வெற்றியாக மாற்ற நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

இந்த தேர்தலில் வாக்களித்த அனைத்து மக்களுக்கும், தேர்தல் ஆணையம், பாதுகாப்புப் படையினர், அனைத்து அரச அதிகாரிகள், அனைத்து ஊடகங்கள், தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் தேர்தல்களை வெற்றிகரமாக மற்றும் அமைதியாக நடத்துவதற்கு உதவிய பொது மக்களுக்கு நன்றி கூறுகிறேன்.” என குறிப்பிடப்பட்டுள்ளது,