
யாழ் தொண்டைமானாறு செல்வ சந்நிதியான் ஆலயத்தில் 108 ஜோடிகளுக்கு திருமணம்; நெகிழவைத்த வெளிநாட்டு தம்பதி !
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வ சந்நிதியான் ஆலயத்தில் இன்றையதினம் (28) திருமணமாகாத 108 ஜோடிகளுக்கு திருமணம் இனிதே நடைபெற்றது.
அன்னதான கந்தன் என சிறப்பிக்கப்படும் யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வ சந்நிதியான் ஆலயத்தில், யாழ் மாவட்டத்தில் தேர்தெடுக்கப்பட்ட வறுமையில் உள்ள திருமணாகாத 108 ஜோடிகளுக்கு , சிங்கப்பூர் தம்பதி , திருமணம் செய்துவைப்பதற்கான உதவியினை வழங்கி இருந்தனர் .
மணமக்களுக்கு தேவையான தாலி , கூறை சேலை மற்றும் திருமணத்திற்கான இதர செலவுகளுக்கும் பணம் வழங்கப்பட்டு , 108 தம்பதிகளுக்கும் செல்வ சந்நிதி ஆலயத்தில் இன்றையதினம் (28) திருமணம் இனிதே நிறைவுபெற்றது.
இந்த 108 தம்பதியினரையும் , யாழ்ப்பாணத்தில் உள்ள 15 பிரதேச செயலகங்கள் ஊடாகவே தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொண்டைமானாறு செல்வ சந்நிதியான் ஆலயத்தில் குழுமியிருந்த பக்தர்கள் வாழ்த்துக்கூற மணமக்களின் திருமணம் இனிதே நடந்த நிலையில், திருமணம் செய்து வைக்க பேருதவி வழங்கிய சிங்கப்பூர் தம்பதிகளுக்கும் மணமக்களுக்கும் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.
அதேவேளை வரலாற்று சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வ சந்நிதியான் ஆலய வருடாந்த பெரும் திருவிழா தற்போது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.