
ஆண்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற வர்த்தமானி திருத்தம்
இலங்கையில் தொடருந்து நிலைய அதிபர்கள் பதவிக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பில் ஆண்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ள வர்த்தமானி, திருத்தத்துக்காக அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானியை எதிர்த்து அயேஷானி ஜயவர்தன மற்றும் சுரேஷ் விதுஷா ஆகிய இரு பெண்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மனுதாரர்கள், இதனால் தகுதியான பெண்கள் அந்த பதவிக்கு விண்ணப்பிக்கவும் தேர்ந்தெடுக்கப்படவும் வாய்ப்பு இழந்ததாக குற்றம் சாட்டினர்.
அதேநேரம், இந்த வர்த்தமானியினால் தங்களது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதெனவும், பெண்களும் விண்ணப்பிக்கக்கூடிய விதமாக அறிவிப்பை திருத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.
இந்தநிலையில், குறித்த மனு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையிலிருந்த அரச சட்டத்தரணி நயனதாரா பாலபட்டபெந்தி, வர்த்தமானி அறிவித்தலை திருத்தம் செய்ய பரிந்துரைத்து அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நீதிமன்றம் இந்த மனுவை எதிர்வரும் அக்டோபர் 30 ஆம் திகதி மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.