ஏர்லைன்ஸ் விமானம் மூலம் யாழ்ப்பாணத்தின் பெருமை உலகுக்கு

ஏர்லைன்ஸ் விமானம் மூலம் யாழ்ப்பாணத்தின் பெருமை உலகுக்கு

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது ஏர்பஸ் A320-200 ரக விமானம் ஒன்றிற்கு “யாழ்ப்பாணம் நகரம்” (City of Yalpanam) எனப் பெயரிட்டுள்ளது.

சமீபத்தில் தெற்காசியாவின் சிறந்த விமான சேவை என அங்கீகாரம் பெற்ற இந்த விமான நிறுவனம், யாழ்ப்பாணத்தின் வளமான பாரம்பரியத்தையும் கலாசார முக்கியத்துவத்தையும் மதிக்கும் ஒரு அடையாள பூர்வமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

பல மேற்கு நாடுகளில் விடுமுறை காலம் நடந்து வருவதால், ஏராளமான வெளிநாட்டு தமிழ் மக்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் திருவிழாவிற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்களில் இலங்கைக்கும், குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கும் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

ஏர்லைன்ஸ் விமானம் மூலம் யாழ்ப்பாணத்தின் பெருமை உலகுக்கு | Srilankan Airlines Recognition Of Jaffna

எனினும், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையே நேரடி விமானங்கள் இல்லாததால் பயணிகள் தொடர்ந்து பயண சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

தற்போது, ரத்மலானாவில் இருந்து மட்டுமே யாழ்ப்பாணத்திற்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இது கட்டுநாயக்கவிற்கு வரும் பயணிகளுக்கு பல சிக்கல்களையும் காலதாமதத்தையும் ஏற்படுத்துகிறது.

இதன் விளைவாக, பல பயணிகள் சென்னைக்குச் சென்று அங்கிருந்து இடைத்தங்கல் வழிகள் மூலம் யாழ்ப்பாணத்திற்குச் செல்கின்றனர்.

எனினும், இந்த முறையும் அனுமதிக்கப்படும் பதிவு செய்யப்பட்ட பயணப் பொதிகளின் எண்ணிக்கையில் உள்ள கட்டுப்பாடுகள் காரணமாக சவால்கள் பலவற்றை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில், கட்டுநாயக்கவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு நேரடி விமானங்கள் அறிமுகப்படுத்தப்பட்டால், அது பயணத் திறனை பெரிதும் மேம்படுத்தும் என்றும், வடக்கிற்கு வரும் பார்வையாளர்களை ஊக்குவிக்கும் என்றும் கருதப்படுகிறது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எடுத்த இந்த பெயர் சூட்டும் முடிவு, பிராந்திய அங்கீகாரத்தை வலுப்படுத்தவும், தமிழ் சமூகத்தின் கலாசார பாரம்பரியத்தைக் கொண்டாடவும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.