வெளிநாடுகளில் சிக்கியுள்ள மாணவர்களை நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கை நிறைவு
பிலிப்பைன்ஸில் இருந்து 80 மாணவர்கள் நாடு திரும்பினால், வௌிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கை மாணவர்களை நாட்டிற்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் நிறைவுபெறும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
80 மாணவர்கள் அடங்களாக 250 பேர் நாளை மறுதினம் (வியாழக்கிழமை) பிலிப்பைன்ஸில் இருந்து அழைத்து வரப்படவுள்ளனர் என ஜனாதிபதியின் வௌிநாட்டு தொடர்புகளுக்கான மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அவர்கள் 80 பேரும் நாடு திரும்பினால், வௌிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கை மாணவர்கள் அனைவரையும் நாட்டிற்கு அழைத்துவரும் செயற்பாடு நிறைவுபெறும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பெலாரஸில் தற்போது கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள 250 மாணவர்கள் அடுத்த மாதமளவில் நாடு திரும்பவுள்ளதாகவும் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே குறிப்பிட்டுள்ளார். இந்த மாணவர்கள் தற்போது பரீட்சைகளில் தோற்றியுள்ளதால், அவர்களை அடுத்த மாதம் அழைத்துவர தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.