
தமிழர் காணிகளுக்கு 3 மாத காலக்கெடு: கஜேந்திரகுமார் எம்.பி விசனம்
தமிழர்களின் காணிகளுக்கு 3 மாத காலக்கெடு விதித்து அவற்றை அரசாங்கம் உடமையாக்க முயல்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம்(08.05.2025) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி அரசாங்கம் ஒரு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
விசேடமாக வடக்கு மாகாணத்தில் 4 மாவட்டங்களில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் 3669 ஏக்கரும், முல்லைத்தீவில் 1703 ஏக்கரும், கிளிநொச்சியில் 515 ஏக்கரும், மன்னாரை சேர்ந்த 54 ஏக்கருமாக மொத்தம் 5941 ஏக்கர் காணிகளை தனியார்கள் தங்களுக்குரிய காணி உறுதிகளை உறுதிப்படுத்தாத பட்சத்தில் அதனை அரச காணிகளாக பிரகடனப்படுத்த போவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உங்களுக்கு நன்றாக தெரியும். வடக்கு - கிழக்கில் வாழும் மக்களுக்கு சமமான சனத்தொகை இன்று புலம்பெயர் தேசங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் இந்த தீவை விட்டு உயிர் அச்சுறுத்தல் காரணமாகவே வெளியேறினார்கள்.
அவர்களது அனைத்து சொத்துக்களையும் விட்டு, பெரும்பான்மையானவர்கள் அந்த நாடுகளில் சட்டவிரோதமாக நுழைந்து புகலிடம் கேட்கும் நிலை தான் இருந்தது. இந்த காணிகளின் சொந்தக்காரர்கள் பலர் அந்த நாடுகளில் இருந்து திரும்ப முடியாத நிலையில் இருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், வெளிநாடுகளில் வாழும் சில மக்களின் காணிகளை உறுதிப்படுத்த முடியாத நிலையும் இருக்கிறது.
இதனை முன்னாள் அரசாங்கங்கள் ஏற்றுக் கொண்டு, முதல் இருந்த காணியில் இங்கு போர்க் காலத்தில் புதிதாக இருந்தவர்கள் உரிமை பெற முடியாத வகையில் சட்டத்தை வைத்திருந்தார்கள்.
புலம்பெயர் மக்களின் காணிகளுக்கு அநீதி நடைபெறும் என்பதற்காகவே அவை நிறுத்தப்பட்டன. இந்த அரசாங்கம் முதல் இருந்த அரசாங்கங்களை இனவாதி என்றார்கள்.
அவர்களே அந்த காணிகளை அபகரிப்பதை நிறுத்தி வைத்திருந்தார்கள். அங்கு பிரச்சனை இருக்கிறது என்பதை விளங்கிக் கொண்டார்கள்.
இந்த அரசாங்கம் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்காமல் நடைமுறைப்படுத்தி கொண்டிருக்கிறார்கள். இந்தநிலையில், காணி உரிமையாளர்கள் இந்த மூன்று மாதத்திற்குள் காணி உறுப்பத்திரங்களை உறுதிப்படுத்த முடியாத நிலையே இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.