தேர்தல் நாளில் அநுராதபுரத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம்: 7பேரிடம் வாக்குமூலம்

தேர்தல் நாளில் அநுராதபுரத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம்: 7பேரிடம் வாக்குமூலம்

அநுராதபுரம்- தஹாயியாகம சந்திப்பில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் எஸ்.எப்.லொக்கா என்ற எரோன் ரணசிங்க கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 7பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் எஸ்.எப்.லொக்கா மீது துப்பாக்கி பிரயோகம் நடத்திவிட்டு மோட்டார் சைக்கிள் ஊடாக  தப்பிச் சென்றவர்கள் தொடர்பாக சி.சி.டி.வி காணொளி பதிவு ஊடாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக விரைவான விசாரணையை முன்னெடுப்பதற்கு விசேட குழுவொன்றும் அமைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர்களை உடனடியாக கைது செய்யுமாறு அநுராதபுரம் பிரதான நீதவான் ஜனக்க பிரியந்த சமரசிங்கவினால் பொலிஸாருக்கு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டமையினை தொடர்ந்தே இவ்வாறு விரைவான விசாரணையை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

அநுராதபுரம் – தஹாயியாகம சந்திப்பில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் எஸ்.எப்.லொக்கா என்ற எரோன் ரணசிங்க  நேற்று (புதன்கிழமை)கொல்லப்பட்டுள்ளார்.

அநுராதபுரத்தில்  கடந்த2015ஆம் ஆண்டு இரவு விடுதி ஒன்றில் வைத்து கராட்தே சம்பியனான வசந்த சொய்சா கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான எஸ்.எப்.லொக்கா என்பவரே இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.