
இலங்கை குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்
இலங்கை 2024 ஆம் ஆண்டு எதிர்பார்த்ததை விட அதிகமாக வளர்ச்சி கண்டிருந்தாலும், மக்கள்தொகையின் மூன்றில் ஒரு பகுதி தற்போதும் வறுமையில் அல்லது மீண்டும் வறுமைக்குள் செல்வதற்கான அபாயத்திலும் இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
மாலத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கான உலக வங்கி பிராந்திய பணிப்பாளர் டேவிட் சிஸ்லன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அபிவிருத்தி இற்றைப்படுத்தல் Sri Lanka Development Update என்ற இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் அறிக்கையின் மூலம் இந்த விடயம் வெளிப்பட்டுள்ளது.
இலங்கையின் தற்போதைய பொருளாதார மீட்பு நிலை சிறப்பாக இருப்பதாகவும், 2024 இல் 5% வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது முன்னதாகக் கணிக்கப்பட்ட 4.4% வளர்ச்சியைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணிகளாக தொழில்துறை மற்றும் சேவைத் துறைகள், குறிப்பாக கட்டிடத் துறை மற்றும் சுற்றுலா தொடர்பான சேவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
எனினும், உலக வங்கி எச்சரிக்கையின்படி, இந்த வளர்ச்சி எல்லோருக்கும் சமானமாக பயனளிக்கவில்லை.
குறிப்பாக வறுமையில் வாழ்பவர்களுக்கு ஊடுதல் உதவிகள் வழங்கப்பட வேண்டிய அவசியம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்காக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் வறியவர்களுக்கு உதவும் கொள்கைகள் மீது கவனம் செலுத்த வேண்டும் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டில், உலகளாவிய பொருளாதார நிலைமைகள், எதிர்பாராத வர்த்தகக் கொள்கை மாற்றங்கள், மற்றும் உள்ளக கட்டமைப்பு சிக்கல்கள் காரணமாக இலங்கையின் வளர்ச்சி 3.5% வரை குறைவடையும் என இந்த அறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.