தென்கொரியாவில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்குமான பாடசாலைகள் மீண்டும் திறப்பு!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றை சிறப்பாக கட்டுப்படுத்திய நாடு என பாராட்டப்பட்ட தென்கொரியாவில், பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் அனைத்து வகுப்பு மாணவர்களுக்குமான பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
கடந்த மாதம் முதல் உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பாடசாலைகள் திறக்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் எஞ்சிய அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேற்று (திங்கட்கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கின. வழமைபோல் அல்லாது வகுப்பறைகள் மற்றும் சிற்றூண்டி சாலைகளில் பிளாஸ்டிக் திரைகள் போடப்பட்டு மாணவர்களின் இடைவெளி பேணப்படுகின்றது.
தென்கொரியாவில் அண்மையில், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று மீண்டும் அதிகரித்துள்ளதால், புச்சியோன் பகுதியில் 251 பாடசாலைகள் மீண்டும் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தென்கொரியாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, 11,814பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 273பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் 38பேருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.