அரசாங்கம் அமைப்பதற்கான ஆணையை மக்கள் ஐ.தே.க.விற்கே வழங்குவர் – ரணில்

அரசாங்கம் அமைப்பதற்கான ஆணையை மக்கள் ஐ.தே.க.விற்கே வழங்குவர் – ரணில்

அரசாங்கம் அமைப்பதற்கான ஆணையை இம்முறை மக்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்குவார்கள் என  ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டார்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தைத் தெரிவு செய்வதற்காக தேர்தல் வாக்களிப்பில் ஈடுபட்ட பின்னர் இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “சுயாதீன ஆணைக்குழுக்கள் இருந்தால் மாத்திரமே சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்த முடியும். அதனையே நாம் பாதுகாப்பதற்கு முற்படுகின்றோம்.

அதேபோன்று இப்போது வேட்பாளர்களைவிடவும் கட்சிகள் இருக்கின்றன. ஆகவேதான் இந்த விருப்புவாக்கு முறைமைக்குப் பதிலாக தொகுதிவாரி பிரதிநிதித்துவமுறை மற்றும் விகிதாசாரப் பிரதிநிதித்துவமுறை ஆகியவற்றின் கலப்பின் அடிப்படையிலான தேர்தல் முறைமையைப் பரிந்துரை செய்கின்றோம்.

எதிர்வரும் நாடாளுமன்றத்தில் இதுகுறித்து ஒரு இறுதி இணக்கப்பாட்டிற்கு வரமுடியும் என்று நம்புவதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

தேர்தலில் விருப்புவாக்கு முறைமை தொடர்ந்தும் காணப்படும். எனினும் நாம் தொகுதிவாரி பிரதிநிதித்துவ முறைமையின் கலப்பு முறைமை ஒன்றையே கோருகின்றோம்.

ஏனெனில் அதனை நடத்துவதும் மிகவும் இலகுவானதாகும். மிகப் பாரியளவிலான தேர்தல் பிரசாரக் கூட்டங்களை நடத்தவேண்டிய அவசியமில்லை.

இலத்திரனியல் மற்றும் அச்சூடகங்களின் ஊடாக பிரசார விளம்பரப்படுத்தல்களை மேற்கொள்ள முடியும். எனவே எதிர்காலத்தில் கலப்பு முறையில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கின்றேன்.

கடந்த காலத்தில் நாடாளுமன்றத்தில் இதுபற்றி கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டன. முக்கிய இரு கட்சிகளும் கலப்பு முறைமைக்கு உடன்பட்ட போதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சிறிய கட்சிகள் மறுப்பைத் தெரிவித்திருந்தன” என அவர் மேலும் தெரிவித்தார்.