
வாகன இறக்குமதி தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து வெளியான தகவல்
உற்பத்தி திகதியின் அடிப்படையில் வாகனங்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கையினால் வாகன இறக்குமதி செயற்பாடுகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் - இலங்கை வணிக சம்மேளனத்தில் தலைவர் ஜகத் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
4 வருடங்களின் பின்னர் வாகன சந்தையை திறப்பது தொடர்பில் குழுவொன்றை அமைத்து ஆராயப்பட்டது.
அந்த குழுவில் பதிவு செய்த திகதி என்பதற்கு மாறாக உற்பத்தி திகதியின் அடிப்படையில் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
ஒரு பிள்ளையை பாடசாலைக்குச் சேர்க்கும் போது அந்த பிள்ளையின் பிறந்த திகதியே கணக்கில் கொள்ளப்படுகிறதே தவிர அந்த பிள்ளை கருவில் உருவான திகதி கணக்கில் கொள்ளப்படுவதில்லை எனவும் அத்தகைய திகதியையும் எவராலும் நிச்சயமாகக் கூறமுடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்திலும் அதுபோலவே தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. வாகனம் உற்பத்திசெய்த நிறுவனத்துக்கே இந்த வாகனம் எப்போது உற்பத்தி செய்யப்பட்டது என்பதை உரிய வகையில் கண்டறிய முடியாது.
எனவே, வாகனம் உருவாக்கப்பட்டுப் பதிவுசெய்யப்பட்டு வீதியோட்டத்துக்கு தயார்ப்படுத்தப்பட்ட தினத்தையே அதன் உற்பத்தி திகதியாகக் கொள்ளவேண்டும்.
இந்த சிக்கல் காரணமாகவே பல வாகனங்கள் துறைமுகத்தில் தேங்கியிருக்க வேண்டும் நிலை ஏற்பட்டதாகவும், குறித்த பிரச்சினைகளை நிவர்த்தி செய்து முன்னதாக பின்பற்றப்பட முறைமைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என ஜப்பான் - இலங்கை வணிக சம்மேளனத்தில் தலைவர் ஜகத் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.