
யாழில் குளிக்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு; துயரத்தில் குடும்பம்
யாழ். சேந்தாங்குளம் கடலில் (21) நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் காங்கேசன்துறை வீதி, இணுவில் பிரதேசத்தை சேர்ந்த பி.சாருஜன் (வயது 20) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் அவரது நண்பர்கள் 14 பேருடன் குளிப்பதற்காக நேற்று மாலை (21) இளவாலை சேந்தாங்குளம் கடலுக்கு சென்றனர்.
கடலில் குளித்துக்கெண்டு இருந்தவேளை திடீரென கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் இளைஞனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
பின்னர் இளைஞனின் சடலம் கரை ஒதுங்கிய நிலையில் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
அதேவேளை குறித்த கடல் பகுதியானது பாரிய அலை எழும் பகுதியாக காணப்படுகிறது. இருப்பினும் எந்தவிதமான எச்சரிக்கை அறிவிப்புகளும் காட்சிப்படுத்தப்படவில்லை என விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இதற்கு முன்னரும் இவ்வாறு மரணம் இதே பகுதியில் சம்பவித்துள்ளதாகவும், உரிய எச்சரிக்கை சமிக்ஞைகளை காட்சிப்படுத்துமாறும் அங்கு செல்லும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.