
நகை கடையில் களவாட முயன்றவர் சிக்கினார்
நகை கடை ஒன்றிலிருந்து தங்கச் சங்கிலிகளை திருடிச் செல்ல முயன்ற சந்தேக நபரொருவர் நேற்று (18) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தறை - அக்குரஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சந்தேக நபர் அக்குரஸ்ஸ பிரதேசத்தில் உள்ள நகை கடை ஒன்றிற்கு நேற்றைய தினம் சென்றுள்ளார்.
இதன்போது நகை கடையிலிருந்த 3 தங்கச் சங்கிலிகளை திருடிச் செல்ல முயன்றுள்ளார். இதனை அவதானித்த நகை கடையின் பணியாளர்கள், சந்தேக நபரை பிடித்து அக்குரஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குருணாகல், நிக்கவரெட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடையவர் ஆவார். மேலும் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்குரஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.