
சிறுமியை திருமணம் செய்த இளைஞனுக்கு 20 வருடங்கள் சிறை
தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் 16 வயது சிறுமியை திருமணம் செய்த 31 வயதுடைய நபருக்கு 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு குறித்த சிறுமியை இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதை அடுத்து சிறுமியை கணவர் குடும்பத்தினர் துன்புறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தது தெரியவந்துள்ளது.
பின்னர், சிறுமியை திருமணம் செய்த நபர் , அவரது தாய் , தந்தை மற்றும் திருமணத்தை ஏற்பாடு செய்த அவரது உறவினர் பெண் ஆகியோர் கைது செய்யப்பட்டு புதுச்சேரி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
தொடர்ந்து குழந்தை திருமணம் மற்றும் பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் குறித்த நபருக்கு 20 வருடங்கள் சிறைத்தண்டனை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும் திருமணத்தை நடத்தி வைத்த இருவரது பெற்றோர்கள் மற்றும் உறவினருக்கு தலா 2 வருடங்கள் சிறைத்தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.