நிலவும் சீரற்ற வானிலையால் 15 மாவட்டங்கள் பாதிப்பு : மக்களுக்கு வெளியான அறிவிப்பு!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சுமார் 15 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய 6,785 குடும்பங்களைச் சேர்ந்த 20,300 பேர் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் ,நிலவும் சீரற்ற வானிலையால் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக நேற்று இரவு மூடப்பட்ட கண்டி - மஹியங்கனை வீதி மீண்டும் பாவனைக்காக திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வலப்பனை பிரதேச செயலகப் பிரிவின் மலபட்டாவ பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக வலப்பனையில் இருந்து ஹகுரான்கெத்த வழியாக கண்டி செல்லும் பாதை மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
2025ஜனவரி 21ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
மழை நிலைமை |
திருகோணமலையிலிருந்து பொத்துவில் மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாககாலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. |
காற்று |
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. |
கடல் நிலை |
கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும். |
இதேவேளை, இடியுடன் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.