வங்கிக் கணக்கை ஊடுருவி 40 இலட்சம் மோசடி; மக்களே அவதானம்

வங்கிக் கணக்கை ஊடுருவி 40 இலட்சம் மோசடி; மக்களே அவதானம்

 நுகேகொடை பகுதியிலுள்ள ஒருவரின் வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி அதிலிருந்து 40 இலட்சம் ரூபாவை மோசடி செய்த சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே நேற்று(9)  உத்தரவிட்டார்.

வங்கிக் கணக்கை ஊடுருவி 40 இலட்சம் மோசடி; மக்களே அவதானம் | 40 Lakhs Fraud By Infiltrating Bank Accounts

நுகேகொட திலகரட்ன மாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணைப்பிரிவுக்கு அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய விசாரணை அதிகாரிகள், முறைப்பாட்டாளர் காணி விற்பனைக்காக இணையத்தில் விளம்பரம் செய்ததாகவும், அதனைக் கொள்வனவு செய்யும் போர்வையில் சந்தேக நபர் முறைப்பாட்டாளரின் கணக்கு இலக்கங்களைப் பெற்றுள்ளதாகவும் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

முறைப்பாட்டாளரின் கணக்கு இலக்கங்களைப் பெற்றுக்கொண்ட சந்தேகநபர், அவரின் வங்கிக் கணக்கிற்குள் நுழைந்து நாற்பது இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

அதெவேளை சந்தேகநபர் தனக்கு நெருக்கமான மற்றுமொரு குழுவினருடன் இணைந்து இந்த மோசடி சம்பவத்தைச் செய்து மோசடியாகப் பணம் பெறப்பட்டு , சந்தேகநபரின் ஐந்து வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் கணினி குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகளின் சமர்ப்பணங்களைப் பரிசீலித்த நீதவான், சந்தேக நபரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.