நாட்டின் மின்சாரக் கட்டணம் திருத்தம் - வெளியான தகவல்
மின் கட்டணம் குறைப்பு சதவீதம் 35% முதல் 40% வரை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து அதிக அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் அரசிடம் இந்த கோரிக்கையை முன்வைப்பதாக மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க (Sanjeewa Dhammika) தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக நீர்மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில், மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து அதிக அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக மின்சார சபை தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, கடந்த(01) நாட்டில் மொத்த மின்சாரத் தேவையில் 62.2% ஆன மின்சாரம் நீர் மின் நிலையங்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில் 35% முதல் 40% வரை மின்சாரக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
“தற்போதைக்கு, காலாண்டு முறையை எடுத்துக் கொண்டால், நான்காவது மின்சாரத் திருத்தத்தை நாம் அனுபவிக்க வேண்டும்.
ஆனால், அதை அனுபவிப்பதை காட்டிலும், இந்த அரசு இதைப் பற்றி யோசிக்கவே இல்லை என்றே நமக்குத் தோன்றுகிறது.
இந்த மின்சார சபைக்கு நியமிக்கப்பட்ட தலைவருக்கு மின் துறையில் ஒப்பந்த நிறுவனம் ஒன்று உள்ளது. மேலும் துணைத் தலைவருக்கும் மின் துறையில் ஒப்பந்த நிறுவனம் உள்ளது.
இப்படி இருக்கையில், மின் கட்டணம் குறையுமா?" எனவே, இம்முறை திருத்தத்தில், மின் கட்டணம் குறைப்பு சதவீதம் 35% முதல் 40% வரை வழங்கப்பட வேண்டும்.
ஏனென்றால் மின்சார சபை தற்போது 200 பில்லியனுக்கும் அதிகமான இலாபத்தைப் பெற்று வருகிறது.