அறுகம்குடாவில் திட்டமிட்ட தாக்குதல் முயற்சி: 06 பேர் கைது

அறுகம்குடாவில் திட்டமிட்ட தாக்குதல் முயற்சி: 06 பேர் கைது

அறுகம்குடா (Arugambay) பகுதியை இலக்கு வைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட சம்பவம் தொடர்பில் மாலைதீவு பிரஜை உட்பட 06 பேர் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herat) தெரிவித்துள்ளார்.

அத்துடன், கைது செய்யப்பட்டவர்கள் தற்போது பயங்கரவாத புலனாய்வு பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி அன்று, இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு சபை, இஸ்ரேலிய குடிமக்கள், தென்னிலங்கையில் உள்ள பிரபலமான சுற்றுலாப் பகுதிகளை உடனடியாக விட்டு வெளியேறுமாறு அவசர எச்சரிக்கையை விடுத்தது.

மேலும்,  இலங்கையின் ஏனைய பகுதிகளில் உள்ள இஸ்ரேலியர்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும், பெரிய பொதுக்கூட்டங்களை நடத்துவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தியது.

இதேவேளை,  இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம், இஸ்ரேலியர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தூதரகத்திற்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாக  கடந்த வாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

குறித்த அறிக்கையில்,  அறுகம்பே பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்கா தனது குடிமக்களை அறிவுறுத்தியமை குறிப்பிடத்தக்கது