ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கு அஸ்வெசும நிவாரணம்! வெளியான மகிழ்ச்சி தகவல்
ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கும் அஸ்வெசும நிவாரணம் வழங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
ஹப்புத்தளையில் நேற்று (08) பிற்பகல் நடைபெற்ற ‘ரணிலால் முடியும்’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், எமது ஆட்சியில் குறைந்த வருமானம் ஈட்டும் மக்களுக்கு ‘அஸ்வெசும’ வழங்கும் திட்டத்தை செயற்படுத்தினோம்
லயன் அறைகளில் வசிக்கும் ஓய்வுபெற்றவர்களுக்கும் அஸ்வெசும நிவாரணம் வழங்கத் தீர்மானித்துள்ளோம்.
எனவே, இவ்வருடத்தில் மேலும் வருமானம் அதிகரிக்கும். தோட்ட தொழிலாளர் சம்பளமும் அதிகரிக்கும்.
லயன் அறைகளுக்குப் பதிலாக, கிராமங்களை உருவாக்கி, அதற்கான காணி உரிமையையும், வீட்டுரிமையையும் வழங்கி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்துவதே எனது திட்டமாகும். அரச ஊழியர்களுக்கும் 10 ஆயிரம் ரூபா வரையில் சம்பளம் அதிகரிக்கும்.
அடுத்த வருடம் மேலும் அதிகரிக்கும். ரூபாவின் பெறுமதியைப் பலப்படுத்தி விலைகளை குறைத்து நிவாரணம் வழங்குவோம். எதிர்காலத்தில் நாட்டை முன்னேற்றுவோம். டிஜிட்டல் யுகத்தை உருவாக்குவோம்.
பெண்கள் சிறுவர் பாதுகாப்புக்களை உறுதிப்படுத்துவோம். பெண்களை தொழில் சந்தைக்குள் உள்வாங்குவோம். சிறுவர் பராமரிப்பு நிறுவனங்களை அமைத்து தருவோம்.
ஹப்புதல மற்றும் தியதலாவ போன்ற நகரங்களின் அபிவிருத்திக்கு வழி செய்வேன். எனவே சிலிண்டருக்கு வாக்களியுங்கள் இல்லாவிட்டால் சிலிண்டரும் இருக்காது கிராமங்களும் இருக்காது’ இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.