பொதுத்தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

பொதுத்தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் நாளை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன.

இதற்கமைய  நாளை நள்ளிரவு முதல் பிரசார பேரணிகள் ,வீடுகளுக்கு சென்று முன்னெடுக்கப்படும் பிரசார நடவடிக்கைகள்,  துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தல். வேட்பாளர்களின் விளம்பர பலகைகள்  காட்சிப்படுத்தல்  மற்றும் சுவரொட்டிகள்  விளம்பர பதாதைகள் காட்சிப்படுத்தல் போன்ற செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள  கட்டுப்பாட்டு விதிமுறைகள் காரணமாக எதிர்வரும் 3 ஆம் திகதி வரை பிரசார நடவடிக்கைகளை நீடிக்குமாறு தேர்தல்கள்  ஆணைக்குழுவில்  கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

எனினும்   சட்டவிதிமுறைகள் மற்றும் ஏனைய தரப்பினரின்  எதிர்ப்பு காரணமாக பிரசார நடவடிக்கையினை நீடிப்பதற்கான  கோரிக்கை  தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்  அனைத்து அரசியல் கட்சிகள் , குழுக்கள்   மற்றும் வேட்பாளர்கள்  சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதை தவிர்த்து செயற்படுவதோடு   சுதந்திரமானதும் நியாயமானதுமான   பொதுத்  தேர்தலை  நடாத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு   தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.