கொரோனா நோயாளிகள் குறித்த விபரங்களை பராமரிக்க புதிய மையங்கள்

கொரோனா நோயாளிகள் குறித்த விபரங்களை பராமரிக்க புதிய மையங்கள்

கொரோனா தொற்றுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் பற்றிய விவரங்களை பராமரிக்க அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உதவி மையங்கள் அமைக்கப்படவுள்ளதாக சென்னை மாநகராட்சி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆதிகேசவன் என்ற முதியவர், திடீரென மருத்துவமனையில் இருந்து காணாமல் போனார்.

ஆதிகேசவனை கண்டுபிடித்து மீட்கக் கோரி அவரது மகன் துளசிதாஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது சென்னை மாநகராட்சியின் சுகாதாரத் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகள் எப்போது அனுமதிக்கப்பட்டார்கள், எப்போது குணமடைந்து வீடு திரும்பினார்கள் என்பன உள்ளிட்ட விபரங்களை பராமரிப்பதற்காக, சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உதவி மையங்கள் அமைக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மாயமான ஆதிகேசவன் பற்றிய விரிவான அறிக்கையை மூன்று வாரங்களில் தாக்கல் செய்யும்படி மாநகராட்சிக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.